நடுவானில் திடீர் மாரடைப்பு - துபாயில் இருந்து சென்னை வந்த பயணி உயிரிழப்பு
பயணி ஒருவா் விமானத்திற்குள்ளேயே உயிரிழந்து விட்டதால் விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின்பு தாமதமாக காலை 7 மணிக்கு துபாய்க்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு சென்றது
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஃபிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம் 117 பயணிகளுடன் இன்று அதிகாலை வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சோ்ந்த பஷீா் (47) என்பவா் வந்து கொண்டு இருந்தாா். விமானம் சென்னையை நெருங்கி போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தாா்.
இதையடுத்து விமான பணிப்பெண்கள் அவருக்கு அவசர முதலுதவி செய்து விமானிக்கும் தகவல் கொடுத்தனா். விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்பு கொண்டு தகவலை கூறி மருத்துவ குழுவை சென்னை தயாா் நிலையில் இருக்கும்படி கூறினாா். இதனையடுத்து சென்னையில் மருத்துவ குழு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் இருந்தது.
கோவையில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்ற ருவாண்டா நாட்டு இளைஞர் கைது
அந்த விமானம் இன்று காலை 4.30 மணிக்கு விமானம் தரையிறங்கியதும் மருத்துவ குழுவினா் விமானத்திற்குள் ஏறி பயணியை பரிசோதித்தனா். ஆனால் பயணி பஷீா் விமான சீட்டில் சாய்ந்தபடி கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதனால் விமானத்தில் இருந்த சகபயணிகளும் விமான ஊழியா்களும் சோகமடைந்தனா். இது குறித்து சென்னை விமான நிலைய போலீசாா் உயிரிழந்த பயணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த விமானம் வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு வந்து விட்டு மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு துபாய் புறப்பட்டு செல்லும். ஆனால் பயணி ஒருவா் விமானத்திற்குள்ளேயே உயிரிழந்து விட்டதால் விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின்பு தாமதமாக இன்று காலை 7 மணிக்கு துபாய்க்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு சென்றது.
நடுவானில் பயணி ஒருவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த சம்பவம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுவானில் விமானத்தில் பயணி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே உயிரிழந்த நாகப்பட்டினம் நாகூர் பகுதியை சேர்ந்த பஷீர் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், பஷீர் ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்