’கடலூரில் அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாசிட்டிவ்’ - பீதியில் பெற்றோர்கள்...!
’’கொரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ள ஆசிரியர் இரண்டு தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர், நேற்று பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரவேண்டும் என உத்தரவின் காரணமாக தான் பள்ளிக்கு வந்துள்ளார்'’
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. தற்போது கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருவதால் நேற்று முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து முன்னேற்பாடு பணிகளில் பள்ளி கல்வித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்ததோடு, பள்ளிக்கூடங்கள் திறப்பதையொட்டி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக்கூடங்களை திறப்பது தொடர்பாக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது, இந்த செய்தியானது பெற்றோர்கள் இடமும் மாணவர்கள் இடமும் பெரும் பீதியினை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து மாதங்களுக்கு பின் தற்பொழுது தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது ஆனால் திறந்த இரண்டாவது நாளே இவ்வாறு பள்ளியில் பணி புரியும் ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அனைவரிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், கொரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ள ஆசிரியர் இரண்டு தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர், நேற்று பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரவேண்டும் என உத்தரவின் காரணமாக தான் பள்ளிக்கு வந்துள்ளார், நேற்று மாலை முதல் அவர்க்கு உடல் சோர்வு, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதன் பின் அவரோடு தொடர்பில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் என கூறினார்.
ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியான செய்தியானது இன்று மாலை முதலே பள்ளி மாணவர்களுக்கு தெரிய வந்ததால் அவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அவர்களின் பெற்றோர்களும் இந்த செய்தியினை கேட்டு மிகவும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். எவ்வளவு தான் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்தாலும் இது போன்ற நிகழ்வுகள் இந்த கொரோனா காலகட்டத்தில் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியோடு சக மாணவர்களுடன் பழகுதல் மற்றும் கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த போன்றவற்றை மாணவர்கள் கட்டாயம் பின்பற்றினால் இது போன்ற நிகழ்வுகளில் இருந்து மாணவர்கள் பத்திரமாக இருக்கலாம், இவ்வாறு வழிமுறைகளை பின்பற்றாமல் மாணவர்கள் விளையாட்டு தனமாக இருக்காமல் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் நினைவில் கொண்டு எச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும் என்பது மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கும் அறிவுரையாக உள்ளது.