One City One Card : பஸ், ரயில், மெட்ரோ எல்லாத்துக்கும் ஒரே அட்டை.. ஹைடெக்காக மாறும் சென்னை சிட்டி
National Common Mobility Card : "சென்னை மாநகர் முழுவதும் இருக்கும், பொதுப்போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த, ஒரே அட்டையை பயன்படுத்தும் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது"
சென்னை மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ஆகியவற்றில் பயணிக்க ஒரே அட்டை பயன்படுத்தும் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் 8 போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுகிறது. அந்த வகையில் போக்குவரத்து கழகங்களில், மின்னணு எந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதில் சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டுகள் வழங்கும் முறை 100% செயல்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், மற்ற போக்குவரத்துக் கழகங்களில் இந்த நடைமுறை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டு வழங்க பணிகள் முழு வெற்றி நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முழுமையாக, இந்த பணிகளை முடிக்க போக்குவரத்து துறை திட்டம் தீட்டியுள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்து வசதிகள்
சென்னை மாநகரை பொறுத்தவரை, மாநகர பேருந்துகள், சென்னை மின்சார ரயில் சேவை மற்றும் சென்னை மெட்ரோ ஆகியவை பிரதான போக்குவரத்து வசதியாக இருந்து வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்த மூன்று சேவைகளை தினமும் பயன்படுத்தி வருகின்றன.
மாநகர போக்குவரத்தை பயன்படுத்துபவர்களுக்கு தனியாக மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் பாஸ் வழங்கப்படுகிறது. அதே போன்று மெட்ரோ சார்பின் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மின்சார ரயில் சார்பில் சீசன் பாஸ் ஆகியவை வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஒரே அட்டை திட்டம்- National Common Mobility Card
இந்தநிலையில் சென்னையில் இருக்கும் மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ஆகிய மூன்று பொது போக்குவரத்துகளில் ஒரே பயண அட்டை மூலம் பயணிக்க முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. என்.சி.எம்.சி அட்டை மூலம் மூன்று பொதுப் போக்குவரத்திலும் பயணம் செய்யும் வகையில் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னேற்பாடாக சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும், எஸ்பிஐ வங்கி உதவியுடன் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து, மாநகரப் பேருந்துகளுக்கு மின்னணு எந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மற்றும் யுபிஐ மூலம் பணம் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
திட்டம் எப்படி செயல்படும்
இந்த ஒரே பயண அட்டை பயன்பாட்டிற்கு வரும்போது, பயண அட்டையில் தேவையான தொகையை முன்கூட்டியே , ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். பயணிப்பதற்கு ஏற்றவாறு அட்டையில் இருந்து பணம் பிடித்துக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்பட உள்ளது. அதேபோன்று மாதாந்திர பாஸ் இந்த பயணாட்டில் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்து தரப்பட உள்ளது. இதேபோன்று சுற்றுலாப் பயணிகளுக்கு கவரும் வகையிலும், ஒரு நாள் பாஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு நாள் பாஸ் எடுத்துக்கொண்டால், ஒரு நாள் முழுவதும் பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ஆகியவற்றை பலமுறை பயணம் செய்து கொள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
செயல்பாட்டிற்கு வருவது எப்போது ?
மூன்று முதல் ஐந்து மாதத்திற்குள் இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.