பிரபல பத்திரிகையாளர் திடீர் மறைவு.. சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்..
முரசொலியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய துணை ஆசிரியர் ராஜா, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார்.
முரசொலியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய துணை ஆசிரியர் ராஜா, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
முரசொலியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவந்த, துணை ஆசிரியர் ராஜா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடன் நந்தனத்திலுள்ள ராஜா அவர்களின் இல்லம் சென்று அவரின் திருவுடலுக்கு மரியாதை செய்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம். pic.twitter.com/IIZ3skiloo
— Udhay (@Udhaystalin) January 24, 2023
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டார். அதில் “ முரசொலி துணை ஆசிரியர் திரு. மு.ராஜா அவர்கள் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திரு. ராஜா அவர்கள் இதழியலில் நீண்ட அனுபவமும், முரசொலியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிழை திருத்துநர் செய்தியாளர் – துணைச் செய்தி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து, திறம்பட பணியாற்றி தலைவர் கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்றவர்.
சென்ற ஆண்டு கொரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டபோது, அவரது மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தேன். கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்த அவர், எனக்கு நன்றி தெரிவித்தபோது அவரது முகத்தில் பூத்த மகிழ்ச்சி இன்றும் என் கண்களுக்குள்ளேயே இருக்கிறது. நான் முரசொலி அலுவலகத்துக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும், அன்பொழுக வரவேற்கும் அவரது புன்சிரிப்பை இனி காண முடியாது என்றெண்ணி கண் கலங்குகிறேன்.
நலமுடன் பணியாற்றி வந்த அவர், பொங்கல் நாளன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்தத் தகவலை அறிந்ததும், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்களையும், சட்டமன்ற உறுப்பினர் திரு. இகருணாநிதி அவர்களையும் தொடர்புகொண்டு, அவருக்கு உரிய சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியிருந்தேன்.
அந்த விபத்திலிருந்து அவர் மீண்டு வந்துவிடுவார் என்று நம்பிக்கையோடு நானும் முரசொலி ஊழியர்களும் காத்திருந்த நிலையில், அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி இடியென இன்று மாலை வந்தது. என்னை நானே தேற்றிக் கொண்டு. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், இந்த வேதனை மிகுந்த செய்தியால் தவிக்கும் முரசொலி ஊழியர்களுக்கும்' திரு. ராஜா அவர்தம் குடும்பத்தார்க்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அவரது மறைவிற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் தரப்பில் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளனர். அதிக்ல் “ முரசொலி நாளிதழின் துணை ஆசிரியர் திரு. ராஜா (வயது 56) அவர்கள், முரசொலியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிழை திருத்துநர் - செய்தியாளர் - துணைச் செய்தி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து, திறம்பட பணியாற்றி முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்றவர்.
கடந்த பொங்கல் நாளன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.இந்த நிலையில் இன்று (24-01-2023) செவ்வாய்க்கிழமை மாலை இயற்கை எய்தினார்.
முரசொலி துணை ஆசிரியர் திரு. ராஜா அவர்களின் மறைவிற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் . முரசொலி துணை ஆசிரியர் திரு. ராஜா மறைவினால் தவிக்கும் அவர்தம் குடும்பத்தார், நண்பர்கள் முரசொலி ஊழியர்கள் அனைவருடனும் துயரத்தை பகிர்ந்துகொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.