முன்னாள் எம்பி மஸ்தானை குடும்பமாக சேர்ந்து போட்டு தள்ளிய கொடூரம்...! மேலும் ஒருவர் கைது..!
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான் வழக்கில் தம்பி மகள் கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேக மரணம்
கடந்த 22.12.2022 அன்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஹரிஷ் ஷாநவாஜ் (34) என்பவர் கொடுத்த புகாரில், "என்னுடைய தந்தை டாக்டர் மஸ்தான் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைத்தின் துணை தலைவராக இருந்ததார். கடந்த டிசம்பர் 22 தேதி அன்று என்னுடைய சித்தப்பா கொஷே ஆதம்பாஷாவின் மருமகன் இம்ரான் பாஷா என்பவருடன் TN-06-AA 1112 எண்ணுடைய KIA காரில் எனது அப்பா செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு டோல்கேட் தாண்டி செல்லும் போது அப்பாவிற்கு வலிப்பு ஏற்பட்டு மார்பு வலி வந்தது. உடனே கூடுவாஞ்சேரி தீபம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் பதிசோதனை செய்து பார்த்துவிட்டு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். அவரது இறப்பிற்கான காரணம் அறிய பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரை பெற்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான இறப்பு என்ற கோணத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தனிப்படை அமைத்து விசாரணை
மேற்கண்ட விசாரணையில் டாக்டர் மஸ்தானின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிய வந்ததால் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தனிப்படையினின் விசாரணையில் சம்பவ தினத்தன்று இறந்து போன மஸ்தானுடன் வந்த உறவினர் இம்ரான் பாஷா மீது சந்தேகம் இருப்பதாக தெரிய வந்ததாலும் அவருடைய பேச்சில் முரண்பாடு இருந்ததாலும், பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் அறிக்கையின்படியும் மஸ்தான் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார் என தெரியவந்தது. சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு இம்ரான் பாஷாவின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
முன்னுக்குப் பின் முரண்
விசாரணையின் போது இம்ரான் பாஷாவின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. மேலும் சம்பவ தினத்தன்று இறந்து போன மல்தான் அவருடைய வீட்டிலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும், இம்ரான் பாஷாவின் தொலைபேசி உரையாடல்களை கண்காணித்ததிலும். இம்ரான் பாஷா கூறிய விவரங்கள் பொய்யனவை என்று தெரிந்தது. சம்பவ தினத்தன்று மஸ்தான் வந்த காரில் இம்ரான் பாஷா தவிர மேலும் இரண்டு நபர்கள் வழியில் சேர்ந்து வந்த விவரம் விசாரணையில் தெரிய வந்தது.
நண்பர்கள் உதவியுடன்
எனவே இமரான் பாஷாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில் இமரான் பாஷா தன்னுடைய சித்தி மகன் தமீம் என்கிற சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்கள் நஷீர், தௌபிக் அகமது, லோகேஷ்வரன் சதித் ஆகியோருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி டாக்டர் மஸ்தானை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இமரான் பாஷாவின் வாக்குமூலத்தில் டாக்டர் மஸ்தான் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதாலும், மருத்துவமனை நடத்தி வருவதாலும் அவருடன் நல்ல பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு நம்ப வைத்து அவரிடம் இருந்து அவ்வப்போது சிறுக சிறுக ரூபாய் 15 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளதாகவும். அதனை திருப்ப கேட்டு டாக்டர் மஸ்தான் தொந்தரவு செய்து வந்ததால் தன்னுடைய சித்தி மகன் சுல்தான் அகமது மற்றும் அவனது நண்பர்கள் நஷீர் தௌபிக் அகமது, லோகேஷ்வரன் ஆகியயோருடன் சேர்ந்து திட்டம் திட்டி பைனானசியரிடம் பணம் பெற போவதாக கூறி நம்ப வைத்து மஸ்தானை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.
காரில் வைத்து கதையை முடித்த உறவினர்கள்
அவ்வாறு செல்லும் போது அவரது காரில் இம்ரானும். தமீம் (எ) சுல்தான் மற்றும் நனீ ஆகியோருடன் செல்லும் போது அவர்களது காரை தொழிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோரை வேறு ஒரு காரில் பின் தொடத்ந்து வர சொல்லி விட்டு செங்கல்பட்டு நோக்கி அழைத்து சென்று தனியான இடத்தில் காரை நிறுத்தி காரின்பின் சீட்டில் அமர்ந்திருந்த மஸ்தானின் கைகளை பின்புறமாக இருந்து இழுத்து பிடித்துக் கொள்ள கல்தான் அவரது வாய் மற்றும் முக்கை அழுத்தி பிடித்து மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்ததாகவும் பின்னால் காரில் வந்த தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் உடந்தையாக இருந்தவர் அங்கிருந்து தப்பிக்க உதவியதாகவும் பின்னர் மஸ்தானுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பால் இறந்து விட்டதாக மற்றவர்களை நம்ப வைத்து ஏமாற்றியதையும் ஒப்புக்கொண்டார்.
அதிரடி கைது
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட இம்ரான் பாஷா, தமீம் என்கிற சுல்தான. நஷீர், தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, டாக்டர் மஸ்தானை கொலை செய்ய பயன்படுத்திய கார் மற்றும் இரு சக்கர வானம் பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி இம்ரான் பாஷாவின் தொலைபேசி அழைப்புக்களை தணிக்கை செய்து பார்த்த போது டாக்டர் மஸ்தானை கொலை செய்வதற்கு முன்னும் பின்னும் இம்ரான் பாஷா அவருடைய தொலைபேசியில் இருந்து, அவருடைய மாமனார் கௌசே ஆதாம்பாஷாவுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட மஸ்தானுக்கும் அவருடைய தம்பி ஆதாம் பாஷாவிற்கும் அவர்களுடைய குடும்ப சொத்தான வீடு சம்பந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மஸ்தான் அவர்கள் அவரது தம்பி ஆதாம் பாஷாவின் மருத்துவமனைக்கு சென்று சத்தம் போட்டது விசாரணையில் தெரிந்ததால், கொலை செய்யப்பட்ட மஸ்தானின் தம்பி கௌசே ஆதாம் பாஷாவிற்கு கொலையில் தொடர்பு இருக்க வாய்புள்ளதாக சந்தேகம் இருந்த நிலையில், இம்ரான் பாஷா, தமீம் (எ) சுல்தான் அகமது, நஷீர், ஆகியவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யப்பட்டது.
வெளியே வந்த சொத்து பிரச்சனை
இம்ரான் பாஷாவிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மஸ்தான், இம்ரான் பஷாவின் மாமனாரும், மஸ்தானுக்கு தம்பியுமான கௌளசே ஆதாம் பாஷாவிற்கு கொடுத்த கடன் ரூபாய் 5 லட்சத்தை திருப்பி கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாலும், அவர்களது குடும்ப சொத்தான வீட்டை தனது மாமனாருக்கு எழுதி கொடுக்க தடையாக இருந்ததாலும், தனது மாமனாருடன் சேர்ந்து மஸ்தான் அவர்களை கொலை செய்ய திட்டம் போட்டு அதன்படி மஸ்தான் அவர்களுடன் நெருங்கி பழகி அவரை வெளியே காரில் அழைத்து சென்று தனது உறவினர் சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் 12.01.2023 காலை இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 6 வது நபர் கௌசே ஆதாம் பாஷாவை கைது செய்து விசாரணை செய்ய, அவரும் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்து, கௌசே ஆதாம்பாஷவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்
தம்பி மகளும் கைது
மஸ்தானின் தம்பியை போலீசார் காவலில் எடுத்து மேலும் இந்த கொலையில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று விசாரித்த போது மஸ்தானின் தம்பி மகள் ஹரிதா ஷாஹினா(26) மஸ்தான் கொலையில் தந்தைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் மஸ்தானின் தம்பி மகள் ஹரிதா ஷாஹினாவை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுவரை மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி, தம்பியின் மகள், தம்பியின் மருமகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.