கறி சூடாக இல்லையென தகராறு ; கூலித் தொழிலாளி மீது தாக்குதல் ! சோகத்தில் தாய், மகள் தற்கொலை
தள்ளுவண்டி கடையில் , கறி சூடாக இல்லை என கூறி கூலி தொழிலாளியை தாக்கிய நபர்

கறி சூடாக இல்லை எனக் கூறியதால் ஏற்பட்ட தகராறில் , கூலித் தொழிலாளியை கட்டையால் தாக்கிய நபர்
சென்னை கோயம்பேடு சந்தை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருபவர் தினேஷ் ( வயது 24 ) இவர் கோயம்பேடு சந்தை பி சாலையில் உள்ள தள்ளுவண்டி கடைக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது, அங்கு வாங்கிய கறி சூடு இல்லாததால், அதை சூடுபடுத்தி தரும்படி கடை உரிமையாளரான பாடி குப்பத்தைச் சேர்ந்த சங்கர் ( வயது 44 ) என்பவரிடம் கூறியுள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு மாறி மாறி தாக்கி கொண்டனர்.
ஆத்திரமடைந்த சங்கர் அருகில் இருந்த கட்டையால் தினேஷின் தலையில் அடித்துள்ளார். இதில் ரத்த காயமடைந்த தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் 20 தையல் போடப்பட்டது. இரு தரப்பினர் அளித்த புகார் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
மகன் இறந்த சோகத்தில் தாய் மற்றும் மகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் அருகே கொங்கரை மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 42 ) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி ( வயது 36 ) இவர்களது மகள் பத்மாவதி ( வயது 14 ) மகன் புருஷோத்தமன் ( வயது 11 ). கொங்கரை மாம்பட்டு திரவுபதி அம்மன் கோவில் பின்புறம் உள்ள குளத்தில் மூழ்கி, மகன் புருஷோத்தமன் உயிரிழந்தார். இறுதிச் சடங்கு நடைபெற்று அஸ்தியை கடலில் கரைக்க, செந்தில்குமார் புதுச்சேரிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், மகன் இறந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி, மகள் பத்மாவதியை அழைத்துக் கொண்டு, பேருந்தில் கொங்கரையில் இருந்து கரசங்கால் வந்துள்ளார். அங்கிருந்து, அருகிலுள்ள ரயில் தண்டவாளம் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அந்த நேரத்தில் திருப்பதியிலிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக விழுப்புரம் செல்லும் ரயில் கரசங்கால் பகுதிக்கு வந்துள்ளது. அப்போது ஜெயலட்சுமி, மகள் பத்மாவதியுடன் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் ஒரத்தி போலீசார் இருவரது உடலையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
துாய்மை பணியாளரை ஆபாச சைகை காட்டி அழைத்த வாலிபர் கைது
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 50 வயது பெண், அடையாறு மண்டலம் 174வது வார்டில் துாய்மை பணியாளராக உள்ளார். அடையாறு மேம்பாலம் கீழ்பகுதியில் சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், வாகனத்தில் இருந்து இறங்கி, திடீரென அவரது பேன்ட் ஜிப்பை கழற்றி, ஆபாச சைகை காட்டி பெண் துாய்மை பணியாளரை அழைத்துள்ளார்.
ஆத்திரமடைந்த அப்பெண், சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்த துடைப்பம் குச்சியால், அந்த நபரை சரமாரியாக அடிக்கவே அந்த வாலிபர் தப்பித்தால் போதும் என பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான வாகனத்தின் எண்ணை வைத்து, அடையாறு மகளிர் போலீசார் விசாரித்தனர். இதில், ஆந்திராவைச் சேர்ந்த, போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பச்சு சாய் தேஜா ( வயது 25 ) என்பவர் என தெரிந்து அவரை கைது செய்தனர்.





















