சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
சென்னையில் கடந்தாண்டு மட்டும் மூலக்கடை - புழல் சாலையில் மட்டும் மொத்தம் 132 விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிக மக்கள் வாழும் நகரமாக தலைநகரம் சென்னை உள்ளது. சென்னையில் சுமார் 1 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். இதனால், சென்னையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவு காணப்படும்.
கார்கள், இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள் என எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னையில் மிகவும் ஆபத்தான சாலை எது? எது? என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மூலக்கடை - புழல்:
அந்த பட்டியலில் சென்னையின் மிகவும் ஆபத்தான சாலையாக மூலக்கடை - புழல் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக துறைமுகத்திற்கு அதிகளவு கன்டெய்னர் லாரிகள், லாரிகள், வாகனங்கள் செல்வதாலும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் செல்வதாலும் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதன் காரணமாகவே இங்கு அடிக்கடி விபத்துகள் நிகழ்கிறது. 6 கி.மீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலையில் கடந்த 2024ம் ஆண்டு மட்டும் இந்த சாலையில் 132 விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இதனால், 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிண்டி கத்திப்பாரா - விமான நிலையம்:
சென்னையில் அடுத்தபடியாக மிகவும் ஆபத்தான சாலையாக கிண்டி கத்திப்பாரா - விமான நிலையம் வரை செல்லும் சாலை அமைந்துள்ளது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட வெளியூர் செல்வபர்கள் இந்த சாலை வழியாகவே சென்னையை விட்டு வெளியேற முடியும். மேலும், தாம்பரம் உள்ளிட்ட புறநகரில் இருந்து சென்னைக்கு வருபவர்களும் இந்த சாலை வழியாகவே சென்னைக்குள் வருவார்கள்.
வழக்கமான நாட்களிலே இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். தீபாவளி, பொங்கல் நாட்களில் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்த சாலையில் கடந்தாண்டில் மட்டும் 104 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதில் 13 உயிரிழப்புகள் உண்டாகியுள்ளது.
இசிஆர் - கொட்டிவாக்கம்:
சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு கடற்கரை சாலை எனப்படும் இசிஆர் சாலை முதல் கொட்டிவாக்கம் வரையிலான சாலையும் மிகவும் ஆபத்தான சாலையாகவே உள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் இந்த சாலையில் மொத்தம் 85 விபத்துகள் உண்டாகியுள்ளது. இந்த விபத்துகளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த சாலையில் ஆங்காங்கே கேபிள் வயர்கள் அமைப்பதற்காக நடக்கும் பணிகள் மற்றும் ஆங்காங்கே திடீரென சாலைகளில் விழுந்த பள்ளங்களே இந்த விபத்திற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் எங்கு அதிகம்?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குமுளி நெடுஞ்சாலையில் கடந்தாண்டில் அதிக விபத்துகள் ஏற்பட்டள்ளது. கடந்தாண்டில் மட்டும் அந்த சாலையில் 331 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகள் காரணமாக 112 பேர் வரை உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டை மாத்தூர் - சவேரியார்புரம் சாலையில் 264 விபத்துகள் கடந்த 2024ம் ஆண்டில் நடந்துள்ளது.
அதிக விபத்து நடந்த இடங்களில் விபத்து நடக்காமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைககள் நெடுஞ்சாலைத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.





















