Kalakshetra Foundation : கலாஷேத்திரா ஃபவுண்டேஷன் விவகாரம்...தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை...முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி..!
அரசைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று திருவான்மியூர் கலாஷேத்திரா பவுன்டேஷன் விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
"கலாஷேத்திரா பவுன்டேஷன் விவகாரம் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, வேல்முருகன், கு. செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன் ஆகியோர் அவையினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலே இங்கே உரையாற்றியிருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை உங்கள் அனுமதியோடு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
மத்திய அரசினுடைய கலாச்சாரத் துறையின்கீழ் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய, கலாஷேத்திரா பவுன்டேஷன் விவகாரத்தைப் பொறுத்தவரை, தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து பாலியல் தொல்லை என ட்விட்டர் செய்தி போட்டு, 21-3-2023 அன்று நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி-க்குக் கடிதம் எழுதியது.
இது தொடர்பாக, கலாஷேத்திரா பவுன்டேஷன் இயக்குநர், நமது மாநில காவல் துறைத் தலைவரைச் சந்தித்து, தங்களது நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். பிறகு, தேசிய மகளிர் ஆணையமே தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் அவ்வாறு விசாரித்தோம்; அந்த விசாரணையை முடித்து வைத்து விட்டோம்” என 25-3-2023 அன்று டி.ஜி.பி.-க்குக் கடிதம் எழுதி தெரிவித்திருக்கிறார்கள்.
பின்னர், கடந்த 29-3-2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து கலாஷேத்திராவில் இருக்கக்கூடிய 210 மாணவிகளிடம் விசாரித்து விட்டுச் சென்றுள்ளார். அப்போது, காவல் துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் காவல் துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலையில், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்திரா பவுன்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டார்கள்.
இன்று காலையில், மீண்டும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, மாணவிகள் மற்றும் நிருவாகத்தினருடன் பேசி வருகிறார்கள். மேலும், அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அரசைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என தங்கள் மூலமாகத் தெரிவித்து அமைகிறேன்" என்றார்.