எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் அனுபவ வயதை கூட பூர்த்தி செய்யாதவர் அண்ணாமலை. எங்கள் முதல்வர் அடக்கத்தின் பிறப்பிடம் , அடக்கத்தின் உறைவிடம்.

இராஜகோபுரம் கட்டும் பணி ஆய்வு
சென்னை வில்லிவாக்கம் அருள்மிகு அகத்தீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான பி.கே. சேகர்பாபு மொட்டை கோபுரத்தின் மீது புதிதாக 5 நிலை இராஜகோபுரம் கட்டும் திருப்பணி துவக்கி வைத்து மற்றும் கோயில் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி தேவாரத்துறை மாணவர்கள் நலச்சங்க ஓதுவா மூர்த்திகளின் பாடுதல் நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வில்லிவாக்கம், பாலியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து மக்களைத் தேடி பயணம் 12 - வது நாள் பயணமாக வில்லிவாக்கம் சட்டமன்ற மேற்கு பகுதி சிட்கோ நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டி மற்றும் கண்ணாடி பாலம் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது ;
40 தொகுதியிலும் திமுக மண்ணை கவ்வும் என அண்ணாமலை தெரிவித்தார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் டெபாசிட் இழுக்கும் என்றார். ஆனால் 40 தொகுதிகளிலும் வென்று காட்டினோம்.
அண்ணாமலைதான் ஆணவத்துடன் செயல்படுகிறார்
ஒரு மக்கள் பிரதிநிதியாக கூட அண்ணாமலையால் வர முடியாது. ஆணவத்துடன் செயல்படுவது அண்ணாமலை தான் நாங்கள் இல்லை. மிகுந்த அடக்கத்துடன் திராவிட மாடல் ஆட்சியில் எங்கள் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அவதூறு பரப்பி அரசியல் செய்கிறார் அண்ணாமலை
திருச்செந்தூரில் எங்களுக்குள் பேசிக் கொண்ட விஷயத்தை ஊதி பெரிதாக்கி அவதூறு பரப்பி அரசியல் செய்கிறார் அண்ணாமலை. எங்கள் அரசியல் அனுபவ வயதை கூட பூர்த்தி செய்யாதவர் அண்ணாமலை. எங்கள் முதல்வர் அடக்கத்தின் பிறப்பிடம், அடக்கத்தின் உறைவிடம். எனவே இது போன்ற பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடாது.
13 அமாவாசைதான் திமுகவிற்கு என எடப்பாடி தெரிவித்தது தொடர்பாக பதில் அளித்த சேகர் பாபு ,
ஏற்கனவே அவர் அமைதிப்படை அமாவாசை என நிரூபித்தவர். எனவே தான் அமாவாசையயை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் நமது முதலமைச்சர் மக்கள் நலனை எண்ணி பணியாற்றி வருகிறார். 2026ம் ஆண்டு தேர்தல் மட்டுமல்ல அடுத்த 25 ஆண்டுகள் மு.க ஸ்டாலின்தான் முதலமைச்சராக அலங்கரிப்பார். பரந்தூருக்கு விஜய் செல்வது நல்லது தான் , போய்விட்டு வரட்டும் என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

