சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு - அமைச்சர், மேயர் வருத்தம்
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மழை நீர் வடிகால் பணியின்போது, பள்ளத்தில் விழுந்து வாலிபர் இறந்த சம்பவத்திற்கு அமைச்சர் சேகர்பாபு , மேயர் பிரியா வருத்தம்.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மழை நீர் வடிகால் பணியின்போது, பள்ளத்தில் விழுந்து வாலிபர் இறந்த சம்பவத்திற்கு அமைச்சர் சேகர்பாபு , மேயர் பிரியா வருத்தம் தெரிவித்தனர்.
6 கோடி ரூபாய் - மழை நீர், சாலை பணிகள்
சென்னை இராயபுரம் மண்டலம் ஸ்டான்லி மருத்துவமனை எதிரில் உள்ள பேரக்ஸ் தெருவில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாடு நிதியின் கீழ் பல்நோக்குக் கட்டடம், நவீன பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பல்வேறு தெருக்களுக்கு பெயர் பலகைகள் பொருத்துதல் உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் , பெருநகர சென்னை வளர்ச்சி குழும தலைவருமான சேகர் பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது ;
17 பணிகளுக்கு 6 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் சென்னை மாநகராட்சி சார்பாக பணிகளை தொடங்கியிருக்கிறோம். மழைக்காலத்தை பொறுத்து வானிலை அறிக்கை பொறுத்து இந்த பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டு இருக்கிறோம்.
வடசென்னையை பொருத்தவரை முதல்வரின் முன்னெடுப்பால் பல்வேறு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறும் வகையில் அழுத்தம் கொடுக்கப்படும்.
2025 ஆம் ஆண்டுக்குள் அரசாணை பெறப்பட்டு அந்த பணிகளை துவக்கக் கூடிய பணிகளையும் , மறுபுறமும் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் 14 - ம் தேதி வடசென்னை வளர்ச்சி திட்டம் குறித்தான முதலமைச்சர் அறிவித்த அனைத்து திட்ட பணிகளையும் விரைவு படுத்தவும் பணிகளையும் எடுத்து வருகிறோம்.
மாநகராட்சி, மின்சாரத்துறை, கழிவுநீர் அகற்றல், குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனைத்து துறைகளும் ஒன்று இணைந்து முதலமைச்சர் அறிவித்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என கூறினார்.
மழை - விஞ்ஞானம் வளர்ந்துள்ளது
வடசென்னை மக்களின் பெரும் கனவான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வண்ணம் இந்த திட்டம் அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வானிலை அறிக்கை பொறுத்து இந்த பணிகள் துவங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். மழை வருவதை முன்கூட்டியே அறியக் கூடிய வகையில் விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. அதை பொறுத்து இந்த பணிகள் ஆரம்பிக்கப்படும். சென்னை மாநகராட்சியில் ஒட்டுமொத்தமாக 72 இடங்களில் மிஸ்ஸிங் லிங்க் பகுதிகளில் இது போன்ற மழைநீர் வடிக்கால்வாய் பணிகளை அமைக்கின்ற பணிகள் நடைபெறுகிறது.
மழை நீர் பணியில் , பள்ளத்தில் விபத்து
அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவுப்படி பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த சம்பவம் வருத்தத்துக்குரிய சம்பவம் என்றாலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தெந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்தி பணி நடைபெறக்கூடிய பகுதிகளை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறோம்.
பள்ளம் வெட்ட அனுமதி
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இந்த பணிகளை மேற்கொள்ளும் என கூறினார். மறு உத்தரவு வரும் வரை சாலைகளை வெட்டக்கூடாது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ள நிலையில் அதில் அத்தியாவசிய பணிகள் வரும்போது அந்த பணிகளுக்கு அனுமதி பெற்ற பிறகு பணிகள் தொடரலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ;
மழைநீர் வடிக்கால்வாய் பொருத்தவரைக்கும் சென்னை மாநகராட்சி சில பணிகளை மேற்கொள்கிறார்கள். நெடுஞ்சாலை துறை சார்பாக ஒரு சில பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று நடந்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தடுப்புகள் வைக்க வேண்டும்
அந்த பணிகள் பொதுப்பணத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த துறையிடம் எந்தெந்த பகுதிகளிலும் மழை நீர்வடிகால் பணிகள் நடைபெறுகிறது எனவும் அப்படி நடைபெறும் இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட சொல்லி இருக்கிறது. மாநகராட்சி சார்பாக பணிகள் நடைபெறக்கூடிய பகுதிகளில் முறையாக தடுப்புகள் வைத்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறோம் என தெரிவித்தார்.