உத்தரவை மீறி வந்த திமுகவினர்; போலீசாரை வைத்து தடுத்த அமைச்சர் எ.வ.வேலு!
‛‛இது அரசு நிகழ்வு, கட்சி நிகழ்ச்சி கிடையாது; நீங்கள் உள்ளே வரக்கூடாது... இப்படியே திரும்பி செல்லுங்கள்,’’ என்று கடுமையாக கூறிவிட்டு, மக்கள் செய்தி தொடர்பு சார்பில் புகைப்படம் கண்காட்சியை பார்வையிட சென்றார் அமைச்சர் எ.வ.வேலு.
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது. தமிழக முதலமைச்சராக மே 7 தேதி மு. க. ஸ்டாலின் பதவியேற்றார். அவரை தொடர்ந்து தன் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பதவி ஏற்ற எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகைபுரிந்தார். ஜூன் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுத் திட்டங்கள், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுசெய்யவுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அறிக்கையில் அமைச்சர் கூறியது, ‛ நான் அரசுப் பணிகள் குறித்து இரண்டு நாட்கள் ஆய்வுசெய்யவுள்ளதால் கட்சியினர் யாரும் அங்கு வந்து என்னை சந்திக்கக்கூடாது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுத்திட ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதனை நாமே மீறக்கூடாது என கட்சி நிர்வாகிகளிடம் வேண்டுக்கோள் விடுத்திருந்தார். அதையும் மீறி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அமைச்சர் எ.வ. வேலு, சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, எம்.பிக்கள் அண்ணாதுரை, விஷ்ணுபிரசாத், எம்.எல்.ஏக்கள் கிரி, அம்பேத்குமார், ஜோதி, சரவணன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் வருகை தந்தனர். வந்தவர்களை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். காவல்துறையின் வரவேற்பும் அளிக்கப்பட்டது. அமைச்சர் வருகையையொட்டி நுழைவாயில் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி 120 போலீஸார் பாதுகாப்பு பணியில் போடப்பட்டது, பொதுமக்கள் அனாவசியமாக யாரும் உள்ளே வராதவாரு தடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் சார்பில் மூன்றாம் பாலினத்தவற்கு கொரோனா கால நிவாரண தொகை வழங்கும் விழா நடைபெற்றது, இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு 332 மூன்றாம் பாலினத்தவற்கு ரூ.2000 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி தொடங்கிவைத்தார், தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் 275 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரத்தை வழங்கினார், மேலும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வருவாய்த்துறை மூலம் 9 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.அமைச்சர் எ.வ.வேலு அறிக்கையில் கூறியும் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கொரோனா தொற்று ஏற்படுத்தும் விதமாக பங்கேற்றனர்.
பின்னர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய கூட்டத்திற்கு செல்லும்போது கட்சி நிர்வாகிகள் கூட்டமாக உள்ளே வந்தனர். அப்போது அமைச்சர் எ.வ.வேலு கட்சி நிர்வாகிகளிடம் இது அரசு நிகழ்வு கட்சி நிகழ்ச்சிகள் கிடையாது நீங்கள் உள்ளே வரக்கூடாது இப்படியே திரும்பி செல்லுங்கள் என்று கடுமையாக கூறிவிட்டு, மக்கள் செய்தி தொடர்பு சார்பில் புகைப்படம் கண்காட்சியை பார்வையிட சென்றார். அங்கும் கட்சி நிர்வாகிகள் அமைச்சர் கூறியதை கேட்காமல் பின் தொடர்ந்து கூட்டமாக வந்தனர். அதன் பின்னர் அமைச்சர் போலீஸ் அதிகாரியிடம் கூறி தேவையில்லாமல் யாரும் உள்ளே வரக்கூடாது எனக்கூறி சென்று விட்டார். பிறகு போலீஸார் கட்சி நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்று வந்தது. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்களை பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்.