நாற்காலியில் பங்காரு! தரையில் அமர்ந்த கே.என்.நேரு! விமர்சனத்துக்கு உள்ளான பிறந்தநாள் சந்திப்பு!
பங்காரு அடிகளாரின் 81 வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்க சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது
மேல்மருவத்தூர்
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். இங்குள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம்தான் இந்த ஊரின் அடையாளமாக தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள். அதிக வருமானம் உள்ளதால், ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலமாக மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, சி.பி.எஸ்.இ பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன. இந்தக் கோயிலுக்கு குடியரசுத்தலைவர், முதலமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள் , தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இக்கோவிலுக்கு வர தவறியது கிடையாது.
இக்கோவிலை சுற்றி வட்டார ஊர்களில், உள்ள பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் ஆதிபராசக்தி புகைப்படத்தை தாராளமாக காணலாம். அதேபோல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மேல்மருவத்தூர் கோவிலை சார்ந்தவர்கள் இல்லாமல் நடைப்பெறுவது கிடையாது. அப்பகுதியில் பங்காரு அடிகளார் மற்றும் அவரது மகன்களான அன்பழகன் செந்தில் ஆகியோர் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்ந்து வருகின்றனர்.
அடிகளார் பிறந்த நாள்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைவதற்கு முழு காரணமாக இருந்தவர் பங்காரு அடிகளார் அவருடைய 81வது பிறந்த நாள் இந்த மாதம் மூன்றாம் கொண்டாடப்பட்டது. அடிகளாரின் பிறந்தநாள் முன்னிட்டு முக்கிய பிரமுகர் பலர் அவரை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அடிகளாரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பிறந்தநாள் முடிந்த பிறகும் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் அடிகளாரை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளரும், நகர்ப்புற அமைச்சரும், திமுகவின் மூத்த அமைச்சருமான கே.என். நேரு கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியதாக கூறப்படுகிறது. தன்னை வாழ்த்த வந்த அமைச்சர் நேருவிற்கு சந்தனமாலை அணிவித்து பங்காரு அடிகளார் மரியாதை செலுத்திய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் ஆன்மீக வாதி மற்றும் கல்வி தந்தையாக விளங்கி வரும் பங்காரு அடிகளாருக்கு மரியாதை தரும் வகையில் தரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பதிவில், கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை. So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம்.ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம், பெரியார்,அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே... என பதிவு செய்துள்ளார்
கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை.
So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம்.
ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம்,
பெரியார்,அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே.
">
முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு சொந்தமான திருமண மண்டபம், வணிக வளாகங்கள் ஆகியவை நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.