Cyclone Michaung: இரவு முதல் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. சுரங்கப்பாதைகள் மூடல், மின்சாரம் துண்டிப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று மதியம் முதலே விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டிச் தீர்த்த கனமழையால், வட சென்னையில் பெரும்பாலான பகுதிகள் முழுவதும் தண்ணீர் நிரம்பி வெள்ள காடாக மாறியது. இதன் காரணமாக பிரதான சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளது.
தொடரும் கனமழை:
மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று மதியம் முதலே விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கன மழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும், பலத்த காற்று வீசியதால் சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்தும், பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள பேரிகாடுகள் விழுந்து கிடந்தது. இதனால், சாலைகளில் பயணிக்கும் பயணிகள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
வட சென்னையில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிப்பு:
வட சென்னையில் பிரதான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக வியாசர்பாடி கணேசபுரம் ஜீவா இரயில்வே மேம் பாலம் சுரங்கப்பாதை , வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் மேம்பாலம் சுரங்க பாதை , முரசொலி மாறன் மேம்பாலம் சுரங்கப் பாதை ஆகிய சுரங்கப்பாதைகளில் சுமார் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் மூன்று சுரங்க பாதைகளிலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி பணியாளர்கள் தேங்கியுள்ள நீரை சக்தி வாய்ந்த மின் மோட் டார்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புளியந்தோப்பு பட் டாளம் ஆஞ்சநேயர் கோவில் பகுதி. கே பி பார்க், ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலை. பெரம்பூர் ஜமாலயா, பெரம்பூர் பிபி சாலை. மேல்பட்டி பொன்னப்பன் தெரு. வியாசர்பாடி பி.வி காலனி. உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் மிக அதிக அளவில் தேங்கியுள்ளது.
மேலும் எம்.கே.பி நகர் காவல் நிலையம், வியாசர்பாடி இரவீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்துள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 4 மணி நேரமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு:
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் , சென்னை புறநகர் பகுதியான திருவெற்றியூர் , தண்டையார்பேட்டை , வியாசர்பாடி , பெரம்பூர் , கொடுங்கையூர் ( சில பகுதிகள் ) , எண்ணூர் , பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுள்ளது. அதேபோல், சென்னையில் உள்ள பகுதிகளிலும் கனமழை காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால்..
சென்னை மாநகராட்சி மக்கள் மழையினால் பாதிக்கப்பட்டிருந்தால், 1913, எண்கள் 04425619204, 04425619206 மற்றும் வாட்ஸ்அப் +91 94454 7720 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் புகார்கள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.