Marina Swimming Pool: ‘ஆனந்தமா ஒரு நீச்சல போடுங்க‘; புதுப் பொலிவுடன் நாளை(அக். 7) திறக்கப்படும் மெரினா நீச்சல் குளம்
பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த சென்னை மெரினா நீச்சல் குளம், நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம், பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்ட மெரினா நீச்சல் குளம், புதுப் பொலிவுடன் நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மெரினா நீச்சல் குளம்
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், மெரினா கடற்கரைக்கு அருகே அமைந்துள்ளது மெரினா நீச்சல் குளம். இது, அதிகாலையில் நீச்சலை அனுபவிக்க ஒரு சிறந்த இடமாக உள்ளது. 100 மீட்டர் நீளம் கொண்ட, 30 மீட்டர் இந்த நீச்சல் குளம், 1947-ம் ஆண்டு கட்டப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் இந்த மெரினா நீச்சல் குளம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதிகபட்சமாக 5 அடி ஆழம் கொண்ட இந்த நீச்சல் குளம், ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் நீச்சல் அடித்து மகிழும் வகையில் அமைந்துள்ளது. இந்த நீச்சல் குளத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், நவீன உடை மாற்றும் அறைகளும் உள்ளன. அதோடு, கண்காணிப்பிற்காக பாதுகாவரர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நீச்சல் குளம் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
பராமரிப்பு பணிகள் முடிந்து திறக்கப்படும் மெரினா நீச்சல் குளம்
இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, 2.50 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்தன. இதனால், மெரினா நீச்சல் குளம் நாளை(07.10.25) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது.
செயல்படும் நேரம்
மெரினா நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை செயல்படும். இதில், காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை பெண்களுக்கான நேரமாகும்.
கட்டணம் எவ்வளவு.?
இந்த நீச்சல் குளத்தில், ஒரு மணி நேரத்திற்கு, பெரியவர்களுக்கு 50 ரூபாய் எனவும், ஆன்லைனில் முன்பதிவு செய்தால் 10 சதவீதம் சலுகை வழங்கப்பட்டு 45 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதேபோல், 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு 30 ரபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைனில் பதிவு செய்தால் 25 ரூபாய் என கட்டணம் விசூலிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும், பராமரிப்பு பணிகளுக்காக, திங்கட்கிழமை இந்த நீச்சல் குளத்திற்கு விடுமுறை நாளாகும்.






















