மேலும் அறிய
Advertisement
Maha Shivaratri 2023: காஞ்சிபுரத்தில் நீங்கள் கேள்விபடாத கோவில்கள் - உங்களுக்காக ஓர் சிறப்பு தொகுப்பு
மகா சிவராத்திரி என்றால் 'சிவபெருமானின் சிறந்த இரவு' என்று பொருள். இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனை வழிபடுவார்கள்.
காஞ்சி மாநகரில் மகா சிவராத்திரிக்கு செல்ல வேண்டிய 1300 ஆண்டுகள் முற்பட்ட முக்கியமான பல்லவர் மற்றும் சோழர் காலத்திய கோயில்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இருக்கும் பல பிரபல கோவில்களுக்கு நாம் சென்று இருப்போம், ஆனால் பிரபலம் இல்லாத, வரலாற்று ரீதியில் முக்கிய கோவில்கள் குறித்து இந்த கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பாபு உதவியுடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
1. பிறவாதீஸ்வரர் கோயில் - கம்மாளத்தெரு புதிய ரயில் நிலையம்
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள இக்கோயில் 1300 வருட பழமையானது. பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது. வாம முனிவர் மறுபிறப்பு வேண்டாம் என்று வேண்டி பூஜித்த கோயிலாக காஞ்சி புராணத்தில் கூறப்படுகிறது. கஜ லட்சுமி, தக்ஷிணாமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி, ஜலந்தரஸம்ஹர மூர்த்தி, ப்ரம்மா,விஷ்ணு மற்றும் துவார பாலகர்கள் என பல அழகிய சிற்பங்களும் கோயில் அமைப்பும் மிக சிறப்பானது.
2. இறவாதேஸ்வரர் கோயில் எனும் ம்ருத்தஞ்ஜெயஸ்வரர் கோயில் - கம்மாளத்தெரு புதிய ரயில் நிலையம்
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள இக்கோயில் பல்லவர் காலத்தியது, பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது. பல்லவர்களுக்கே உரித்தான சோமாஸ்கந்தர் கருவறை, குஞ்சித கரண தாண்டவம், ஜலந்தரஸம்ஹர மூர்த்தி,கால ஸம்ஹர மூர்த்தி , கங்காதர மூர்த்தி, பிச்சாடனர் , அழகிய கொற்றவை என பல அழகிய சிற்பங்கள் கொண்ட கோயில் இது. மார்கண்டேயர், சுவேதன் மற்றும் சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி காஞ்சி நகரத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது தல வரலாறாக உள்ளது.
3. அமரேஸ்வரர் கோயில் எனும் திரிபுராந்தக ஈஸ்வரர்
ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்னாள் வரை அழகுடன் இருந்த இக்கோவில் புனரமைப்பு என்ற பெயரில் இப்போது தனது அடையாளத்தை இழந்து இருக்கிறது. 1909 இல் Alexander Rea என்ற தொல்லியல் நிபுணர் காஞ்சிபுரத்தின் பல கோவில்களை ஆவணப்படுத்தியுள்ளார், அவருடைய பல்லவ கட்டிடக்கலை கட்டுரையில், இக்கோவிலின் மொத்த சிற்ப தொகுதியையும் காட்டியுள்ளார், பல்லவர்களால் கட்டப்பட்ட இக்கோவில் கச்சபேஸ்வரர் கோவில் அருகில் உள்ள ஒரு தெருவில் உள்ளே உள்ளது, அங்கே இருப்பவர்களுக்கு அமரேஸ்வரர் கோவில் என்று மட்டும் தான் தெரியும், இந்த கோவிலின் பழைய பெயர் யாருக்குமே தெரியாது, பல்லவர்களின் சிறப்பான சோமாஸ்கந்தர் கருவறை, ராவண அனுகிரக மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவம், கங்காதர மூர்த்தி , மகிஷாசுர மர்த்தினி சிற்பங்கள் இருந்து இருக்கின்றன. இதுவும் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது. தேவர்கள் அனைவரும் காஞ்சிக்கு வந்து இக்கோயில் சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாற்றில் கூறப்படுகிறது.
4. ஐராவதேஸ்வர் கோவில் - கச்சபேஸ்வர் கோவில் அருகில்
கச்சபேஸ்வர் கோவில் அருகில், நகரின் பிரதான சாலையில் இருந்தாலும் அதிகம் கவனிக்க படாமல் உள்ளடங்கி இருக்கும் ஐராவதேஸ்வர் கோவில், கல்வெட்டு ஏதும் கிடைக்கபெறாவிடிலும் கட்டிட அமைப்பை வைத்து ராஜ சிம்மன் காலத்தியது ஆக இருக்கலாம்.விமானம் ஏதுமின்றி அர்த்த மண்டபத்துடன் கூடிய சிறிய கோவில்.தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில் அக்கடலில் தோன்றிய வெள்ளை யானையாகிய ஐராவதம் இந்திரனைத் தாங்குதற்குப் பூஜித்த தலமாக இத்தல வரலாற்றில் சொல்லப்படுகிறது. கருவறை பல்லவர்க்கே உரித்தான தாரா லிங்கமும் அதற்க்கு பின்னால் ஸோமாஸ்கந்தர் சிற்பமும்,இருபக்கமும் தேவர்கள் சிற்பமும் உள்ளது.
அர்த்த மண்டபத்தின் இடது பக்கத்தில் சக்கரதான மூர்த்தியும், கீழே தைவீக லிங்கத்தை வணங்கும் விஷ்ணு சிற்பமும், வலது பக்கத்தில் உமை அன்னையுடன் இருக்கும் ஊர்த்துவ தாண்டவ சிற்பமும், பிற்கால பூச்சுகளுடன் உள்ளது. பக்க சுவற்றில் பல்லவர் கால மஹிஷாசுர மர்தினியும் முழுவதும் உள்ளது, கீழ் பகுதி முழுவதும் சிதைந்த நிலையில் திரிபுராந்தகர் அருகிலேயே தேரோட்டியாக பிரம்மாவும் , காலஸம்ஹரா மூர்த்தி, பிட்ச்சாடனர் சிற்பமும் உள்ளது.
5. தர்ம மஹாதேவீஸ்வரம் / முக்தேஸ்வரம் -கிழக்கு ராஜவீதி
பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் அவனுடைய மனைவியின் பெயரால் தர்ம மஹாதேவீஸ்வரம் என்றும் இறைவன் மாணிக்கத்தேவர் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலில் பல்வேறு சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. கருவறையில் லிங்கத்தின் பின்னே சோமாஸ்கந்தர் சிற்பமும் உண்டு.வலபியில் வழக்கம் போலவே பூத வரி காணப்படுகிறது.முகமண்டபத்தில், ராவண அனுகிரக மூர்த்தி, கஜ சம்ஹரார், நடன மூர்த்தி என பல்வேறு சிற்பங்களும் சிம்மத்தூண்களும், துவார பாலகர்களும் உள்ளனர். பாத வர்க்கத்தில் பிரம்மசாஸ்தா, துர்கை, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, சண்டேசர்க்குக்கு கொன்றை பூவை சூடும் சிவன், கால சம்ஹார மூர்த்தி, கங்காதரர், லிங்கோத்பவர்,சங்கர நாராயணன், பிச்சாடனர், திருமால், யோக மூர்த்தி மற்றும் உத்குடிகாசனத்தில் அமர்ந்த தட்சிணாமூர்த்தி என பல்வேறு வகையான இறை வடிவ சிற்பங்களை கொண்டு ஒரு பெரும் கலைக்களஞ்சியமாக உள்ளது.
6. தான்தோன்றி ஈஸ்வரர் கோவில் - ஏகாம்பரநாதர் சன்னதி தெரு
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் இக்கோவில் உள்ளது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் பல சிறப்பு பெயர்களை கொண்டவன். அப்பெயர்களில் ஒன்று மத்தவிலாசன். முதல் நையாண்டி நாடகம் எழுதியவன் இவனாகத்தான் இருக்க வேண்டும்.நாடகக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை என்று பல்துறை வித்தகனாக ,இருந்தவன். இவன் எழுதிய நகைச் சுவை நாடகத்தின் பெயர் மத்த விலாசப் பிரஹசனம்.கேரளா நாட்டில் இன்றும் இக்கதை நாடகமாக நடத்தப்படுகிறது. இக்கோவிலின் சுற்று சுவரில் மகேந்திரவர்மனின்(கி.பி 620ல்) மத்த விலாசப் பிரகசனம் என்ற நாடகத்தின் சிற்பங்கள் உள்ளது. தற்போது கோவிலை புணரமைத்தாலும் சிற்பங்கள் அப்படியே உள்ளது.காஞ்சிபுரத்தில் இப்போது உள்ள ஏகாம்பர நாதர் கோவில் அருகில் காபலிகம், பாசுபதம், காளா முகம் மற்றும் சைவ சமயத்தை சேர்ந்த அனைவரும் வாழ்ந்து உள்ளார்கள்.இந் நாடகம் கபாலிகம், பாசுபதம் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களையும் புத்த துறவிகளையும் நையாண்டி செய்கிறது.இச்சிற்பங்களுக்காக, காஞ்சிபுரத்தில் பார்க்கவேண்டிய முக்கிய கோவில்களில் இதுவும் ஒன்று.
7. மதங்கீசுவரர் கோயில்
காஞ்சியிலுள்ள பழமையான இக்கோயில் நகரின் முக்கிய சாலையான ஹாஸ்பிடல் ரோட்டில் உள்ளிடங்கி உள்ளது, வெளியில் இருந்து பார்வைக்கு தெரியாதவாறு உள்ள இக்கோயிலும் காஞ்சியின் பொக்கிஷங்களில் ஒன்றாகும். மேலும், நந்திவர்ம பல்லவன் காலத்தியது. மிகவும் பழமையான இக்கோயில் இறைவனை மதங்க முனிவர் வழிபட்டு ஐம்புலன்களையும் அடக்கியாளும் ஆற்றலைப் பெற்றார் என்று இத்தல வரலாற்றில் சொல்லப்படுகிறது. இக்கோயிலும் முக்தீஸ்வரம் கோயிலும் பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருக்கும், இதிலும் பல அழகிய சிற்பங்கள் உள்ளன.
8. சுரகேஸ்வரர் கோயில்-ஏகாம்பரநாதர் சன்னதி தெரு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் இருக்கும் சுரகேஸ்வரர் கோயில், கல்வெட்டுகளில் சுர வட்டாரமுடைய நாயனார் என்று அழைக்கப்படுகிறது. சுரம் நீங்க இக்கோயில் இறைவனை வழிபடுவர். இக்கோயில் அமைப்பை போன்று தமிழ் நாட்டில் வேறு எங்கும் காணமுடியாது. பல்வேறு அழகிய சிற்பங்களை உடையது.
9. கௌசிகேசுவரர் கோயில்- காஞ்சி காமாட்சியம்மன் கோயில் அருகே
காஞ்சி காமாட்சியம்மன் கோயில் அருகே வடகிழக்கில் அமைந்திருக்கும் கௌசிகேசுவரர் கோயில்,இக்கோயில் சொக்கீசர் கோயில் என்று மற்றோரு பெயராலும் அழைக்கப்படுகிறது. இதுவும் அதிகம் பிரபலமாகாத கோயில் எனினும் ஆயிரம் வருட பழமையானது. சோழர்கால கோயிலாகும். விநாயகர் லலிதாசனத்தில் அமர்ந்த நிலையில் நான்கு திருக்கரங்களுடன்,பின் கரங்கள் அங்குசம் மற்றும் பாசத்தை ஏந்தியுள்ளன. முன்கைகளில் தந்தம் மற்றும் மோதகம் அமைந்துள்ளது. பத்ம பீடத்தின் கீழ்ப்பகுதியில் அவரது வாகனமான மூஷிகமும் பூதகணங்களும் பக்கச் சுவரில் இரு பூதகணங்கள் பலாப்பழம் ஏந்தி நிற்கின்றன.இதன் மேலே உள்ள மகர தோரணத்தில் வலப்பக்க ஓரத்தில் அன்னை இறைவனின் மடியில் அமர்ந்திருக்க இறைவன் அவரை அணைத்தவாறு உமாமகேசுவர மூர்த்தி ஆக உள்ளார்.
தோரணத்தின் நடுவே கணபதி நாட்டிய கோலத்தில் இருக்க பக்கத்தில் கணமொன்று மோதகம் தரும் நிலையில் அமைந்துள்ளது. இடப்புறத்தில் மரத்தடியில் சிவலிங்கத்தை உமாதேவியார் வழிபடும் காட்சியும் சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் தூபம், முக்காலியின் மீது சங்கு, தீபம், மணி முதலான பூஜைப்பொருட்கள் காணப்படுகின்றன. காஞ்சி காமாட்சி அம்மனை தரிசிக்க செல்பவர்கள், சோழர்களின் சிறப்பான கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இக்கோயிலையும் அங்கே உள்ள சிற்பங்களின் அழகையும், ஆயிரம் வருடங்களாக அருள் பாலிக்கும் கரிகால சோழ பிள்ளையாரையும் தரிசியுங்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion