Madras Day 2022: சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய பாரம்பரியமான இடங்கள்!
சென்னை தினத்தையொட்டி, சென்னையிலுள்ள பாரம்பரிய மிக்க இடங்களை தெரிந்து கொண்டு, அங்கு சென்று கண்டு ரசிப்போம்.
இந்தியாவில் கொல்கத்தா நகரத்திற்கு பிறகு, சென்னை நகரத்தில்-தான் அதிகளவிலான பாரம்பரிய மிக்க கட்டடங்கள் நிறைந்துள்ளன. தற்போதும் சென்னைக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ள பாரம்பரிய கட்டடங்கள் குறித்தும், அவை இருக்கும் இடங்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.
புனித ஜார்ஜ் கோட்டை:
மதராஸ் பட்டினத்தை நிர்வாகித்த வேங்கடப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து, ஆங்கிலேயர்கள் குறிப்பிட்ட நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில், 1639-40 ஆண்டுகளில், ஆங்கிலேயர் பிரான்சிஸ் டே என்பவர் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார்.
இந்த கோட்டையானது, ஆங்கிலேயர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கும், அவர்களது பொருட்களை சேமித்து வைக்கவும் பயன்படுத்தி கொண்டனர். அதையடுத்து, இப்பகுதியை சுற்றி மக்கள் குடியேற ஆரம்பித்தனர். பின்னர் இக் கோட்டையைச் சுற்றி கிராமங்கள் உருவாக ஆரம்பித்து, சென்னை உருவானது என்றும் கூறப்படுகிறது.
இக்கோட்டைதான், தமிழ்நாட்டின் தற்போதைய தலைமைச் செயலமாகவும், சட்டப்பேரவை அலுவலகமாகவும் மற்றும அமைச்சர்களின் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இக்கோட்டையில் புனித மேரி கிறிஸ்தவ ஆலயம், கிளைவ் மாளிகை மற்றும் கோட்டை அருங்காட்சியகம் ஆகிய மூன்று கட்டடங்கள் உள்ளன. வாய்ப்பு கிடைக்கும்போது, செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உள்ள அருங்காட்சியகத்துக்குள் சென்று, வரலாற்றை சற்று புரட்டிவிட்டு வாருங்கள்.
பார்த்தசாரதி கோயில்:
தமிழ்நாட்டில் உள்ள வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதான பார்த்தசாரதி கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ளது. இக்கோயிலை 8-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் ராஜா முதலாம் நரசிம்மவர்மன் கட்டினார். இக்கோயில் திருமாலின் அவதாரங்களான நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய ஐந்து உள்ளன. இக்கோயிலில் தென்னிந்திய கட்டடக் கலையை வலியுறுத்தும் விதமாக பல சிற்பங்கள் காணப்படுகின்றன.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்:
தமிழ்நாட்டில் உள்ள சைவ தலங்களில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் குறித்து தேவாரப் பாடல்களில், ஏழாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சம்பந்தர் பாடியுள்ளார். இதிலிருந்து, இக்கோயிலானது 7-ம் நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என அறிய முடிகிறது. பின் 16ஆம் நூற்றாண்டுகளில் போர்ச்சுக்கீசியர், இக்கோயிலை தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பத்து ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது.
திருவல்லிக்கேணி மசூதி:
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் பிரசித்தி பெற்ற புனித தலங்களின் ஒன்றாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மசூதி விளங்குகிறது. இம்மசூதி பெரிய மசூதி என்றும் அழைக்கப்படுகிறது. இம்மசூதியை 1795 ஆண்டு, நவாப்பின் நினைவாக, வாலாஜா குடும்பத்தினரால் கட்டப்பட்டது. இக்கோயிலானது, பல நூற்றாண்டுகளானாலும் பிறகும் புதுமையாக காட்சியளிக்கிறது. இம்மசூதியின் முன் உள்ள இரண்டு தூண்கள் இடைக்கால கட்டடக்கலையை பிரதிபலிக்கின்றன.
சென்னை சாந்தோம் ஆலயம்:
16-ஆம் நூற்றாண்டில், சென்னை மயிலாப்பூர் பகுதியில் போர்ச்சுக்கீசியரின், குடியிருப்புகள் அதிகமாகின. அதைத் தொடர்ந்து கி.பி. 1522 – 23 ஆம் ஆண்டில் சென்னையில் சாந்தோம் ஆலயத்தை கட்டினார். இன்றும், கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டு தலமாகவும், புகழ்பெற்ற கிறிஸ்தவ தலமாகவும் இருப்பதை காணலாம்.
கன்னிமாரா நூலகம்:
கன்னிமாரா நூலகம், 1860 ஆம் ஆண்டு ஜீன் மிட்செல் என்ற ஆங்கிலேயரால், அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள் உள்ளிட்டவைகளின் ஒரு பிரதி, இங்கு பெறப்படுகிறது. இந்நூலகத்தில் பழமையான மற்றும் புகழ்பெற்ற புத்தகங்கள் இருக்கின்றன. மேலும் ஆராய்ச்சி ஈடுபடும் மாணவர்களுக்கு, இந்நூலகம் அறுவுக்களஞ்சியமாக விளங்குகிறது.
சென்னை அரசு அருங்காட்சியகம்:
சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம், 1851-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் உள்ள அருங்காட்சியகத்தில் 6 கட்டடங்கள் அமைந்துள்ளன. இக்காட்சியகத்தில் சிற்பங்கள், விலங்குகள், ஓவியங்கள், நாணயங்கள், இசைக்கருவிகள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பிரம்மஞான சபை:
பிரம்மஞான சபை, சென்னையில் உள்ள அடையாறில் உள்ளது. இச்சபையானது, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில், சமூக் சீர்திருத்த கருத்துக்களை பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது. இங்கு பல வகையான பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளது. இங்கு 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது.
சென்னை தினத்தையொட்டி, சென்னையில் உள்ள பாரம்பரிய மிக்க இடங்களை குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழுங்கள்.
Also Read: ஆகஸ்ட் 15-ஐ சுதந்திர தினமாக தேர்ந்தெடுக்க காரணம் என்ன? சுதந்திர நள்ளிரவில் நேரு பேசியது என்ன?" target=""rel="dofollow">ஆகஸ்ட் 15-ஐ சுதந்திர தினமாக தேர்ந்தெடுக்க காரணம் என்ன? சுதந்திர நள்ளிரவில் நேரு பேசியது என்ன?