மேலும் அறிய
Advertisement
Women Reservation: அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு அவசியமா?- உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?
சமுதாய ரீதியிலான இடஒதுக்கீட்டை பின்பற்றும் நடைமுறையை தமிழக அரசும், அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பின்பற்றுவது துரதிருஷ்டவசமானது.
தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி அமல்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கி 2016 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப் பிரிவின் கீழ் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு எனத் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்தும், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது கூறிய அமர்வு, முதலில் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் 30 சதவீத ஒதுக்கீட்டைப் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கி விட்டு, அதன்பின் சமுதாய ரீதியிலான இடஒதுக்கீட்டைப் பின்பற்றும் நடைமுறையை தமிழக அரசும், டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பின்பற்றுவது துரதிருஷ்டவசமானது எனவும், இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில் இதே நடைமுறைப்படி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது எனவும், அதேசமயம் தகுதி அடிப்படையில் பணி நியமனம் பெறும் உரிமையை மறுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதலில் பொதுப்பிரிவையும், பிறகு சமூக ரீதியிலான இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்பி விட்டு, அதில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பூர்த்தியாகவில்லை என்றால் எத்தனை இடங்கள் நிரப்ப வேண்டுமோ, அத்தனை இடங்களில் பெண்களை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்குகளை முடித்து வைத்தனர்.
குரூப் 1 தேர்வில் 66 இடங்களில் 57-ஐப் பிடித்த பெண்கள்
தமிழ்நாட்டில் உள்ள துணை ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட குரூப் 1 பணிகளுக்கான தேர்வை TNPSC நடத்துகிறது.
கடந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வு ஜனவரி மாதத்தில் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அதையடுத்து, இறுதித் தேர்வுப் பட்டியல் ஜூலை 15ஆம் தேதி வெளியானது. அதில் 66 நபர்கள் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. அதில் 57 நபர்கள் பெண்கள் ஆவர்.
இது சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியது. செங்குத்து இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிப்பதால், பெண்களுக்கே அதிக வாய்ப்பு கிடைப்பதாக ஆண் தேர்வர்கள் விமர்சித்தனர். இதைத் தொடர்ந்து ஏற்கெனவே பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளோடு, புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கல்வி
அரசியல்
பொது அறிவு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion