KCBT APP: கிளாம்பாக்கத்தில் எந்த டைமுக்கு என்ன பஸ் ? சி.எம்.டி.ஏ வெளியிட்ட APP..! முழு தகவல்
KCBT App: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையின் அதீத வளர்ச்சியால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகளை, சென்னை புறநகர் பகுதியில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - Kilambakkam Bus Terminus
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்ததிலிருந்து பல்வேறு சிக்கல்கள் இருந்த வண்ணம் உள்ளன. அடிப்படைச் சிக்கல்கள் படிப்படியாக தீர்க்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் பகுதியில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகளும் வேகம் எடுத்துள்ளன.
இதேபோன்று விரைவில் கிளாம்பாக்கம் பகுதியில், ஆகாய நடைமேடை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, தென்மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. படிப்படியாக பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருவதால், பயணிகளும் சற்று நிம்மதி அடைய தொடங்கியுள்ளனர்.
புதிய செயலி அறிமுகம் KCBT APP
இந்தநிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு வசதியாக, புதிய செயலியை சிஎம்டிஏ வெளியிட்டுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலியின் சிறப்பம்சங்கள் என்னென்ன ?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயலியில், பேருந்து நிலையத்தில் எந்த மாதிரியான சேவைகள் வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பேருந்து நிலையத்தில் வழங்கப்படும் சேவைகளான, டாக்ஸி புக்கிங், ப்ரீபெய்டு ஆட்டோ புக்கிங், ஆகியவற்றின் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இதேபோன்று எந்தப் ஊர் பேருந்து எந்த நடைமேடையில் இருக்கிறது, எந்த ஊர் பேருந்து எத்தனை மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்புகிறது என்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த தகவல்கள் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலியை டவுன்லோடு செய்வது எப்படி ?
கூகுள் பிளே ஸ்டோரில் சென்று KCBT என்ன சர்ச் செய்தால் முதல் ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பேருந்துகளையும் ட்ராக் செய்யும் வசதிகள் உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

