ISKCON Rath Yatra: சென்னை இஸ்கான் ஜெகநாதர் ரத யாத்திரை - எப்போது, எங்கு நடைபெறுகிறது தெரியுமா?
சென்னை இஸ்கான் கோயில் சார்பில் பாலவாக்கம் கடற்கரை சாலையில் நாளை ஜெகநாதர் ரத யாத்திரை நடைபெற இருக்கிறது.
ISKCON Rath Yatra : சென்னை இஸ்கான் கோயில் சார்பில் பாலவாக்கம் கடற்கரை சாலையில் நாளை ஜெகநாதர் ரத யாத்திரை நடைபெற இருக்கிறது.
இஸ்கான் கோயில்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்கான் கோயில் கிருஷ்ணரை வழிபடும் இந்துக்களிடையே மிகவும் பிரசித்து பெற்ற கோயிலாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளை மாளிகை போன்று பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் இஸ்கான் கோயில் அமைந்துள்ளது. குறிப்பாக, "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா" என்ற இஸ்கான் இயக்கத்தின் பக்தி கோஷம் மிகவும் பிரபலமானது.
இஸ்கான் அமைப்பின் சார்பில், பல்வேறு நாடுகளில், பல்வேறு சமயங்களில் பல்வேறு ரத யாத்திரை உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படும். அந்த வகையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில், 40வது ’ஸ்ரீ ஸ்ரீ ஜெகன்னாதரின் ரத யாத்திரை' இந்த ஆண்டும், வரும் 25-ம் தேதி (நாளை) பிற்பகல் 3 மணி அளவில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கேற்ப, சிறப்பு ஏற்பாடுகளை அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் கிளை திட்டமிட்டுள்ளது.
நிகழ்ச்சி நிரல்
40வது ஸ்ரீ ஸ்ரீ ஜெகன்னாதரின் ரத யாத்திரை நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராயல் என்பீல்டு ஷோரும் அருகில் ஜெகன்னாதர் ரத யாத்திரை தொடங்குகிறது. அங்கிருந்து நீலாங்கரை வெட்டுவான் கேணி ஈஞ்சம்பாக்கம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோயல் மார்பிள் அருகில் அக்கரையில் யாத்திரை முடிவடைய உள்ளது.
வழிநெடுகிலும், பக்தர்கள் ரதம் இழுத்தும், கீர்த்தனை பாடியும், ஆடியபடி வண்ணமயமான பக்தி பரவசத்துடன் ரத யாத்திரயை நடத்தப்படவுள்ளதாக இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த ரதயாத்திரையின் போது, பல்வேறு பிரபலங்களும் பக்தர்களுடன் இணைந்து யாத்திரையில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு பூஜை
இந்த யாத்திரை தொடங்கும் முன்பாக பிற்பகல் 2.30 மணிக்கு பானு சுவாமி உரை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. யாத்திரை நிறைவடைந்த பின்பு, பஜனைகள் செய்யப்படும். இறுதியில் இரவு 8 மணிக்கு யாத்திரையில் பங்கேற்வர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். மேலும், ரத யாத்திரை செல்லும் வழியில் கீர்த்தனம் பாடப்படும். இதற்கு கூடவே பிரசாதமும் வழங்கப்படும்.
இந்த விழாவிற்கு இஸ்கான் நிர்வாகக் குழு ஆணையர் பானு சுவாமி மகாராஜ் தலைமை தாங்குகிறார். மேலும் இந்த விழாவிற்கு கௌரவ விருந்தினர்களாக தொழிலதிபர் ஸ்ரீ சுரேஷ் சங்கி, சுனில் நாயர் சிஇஓ அசோசியேட் முதன்மை திட்ட ஆலோசகர் பங்கேற்கின்றனர். இந்த ரத யாத்திரையில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தகவலுக்கு, 6385042108 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். https://www.iskconchennai.org/-ஐப் பார்க்கவும்.