மேலும் அறிய
Advertisement
கல்வியை பொதுப்பட்டியலில் நீடிக்க செய்வது கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தலானது - நீதிபதி
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி நெருக்கடி நிலை காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்ட திருத்ததை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்மனு.
கல்வியை பொதுப்பட்டியலில் நீடிக்க செய்வது கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தலானது என தமிழக அரசும், கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி கொண்டு வரப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் இல்லை என மத்திய அரசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.
கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்ட திருத்தத்தை எதிர்த்து அறம் செய்ய விரும்பு அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர் கல்வித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அரசியல் சட்டம், ஆரம்பத்தில் கல்வி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே விட்டிருந்தது எனவும், கடந்த 1975 முதல் 1977ம் ஆண்டு வரை, 21 மாதங்கள் அவசர நிலை அமலில் இருந்த காலகட்டத்தில், சர்தார் ஸ்வரண் சிங் குழு அறிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் முறையான எந்த விவாதமும் நடத்தாமல், கல்வி, மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்வி குறித்த சட்டங்கள் இயற்றும் போது மாநில சட்டமன்றங்களை விட நாடாளுமன்றம் அதிக அதிகாரம் வாய்ந்ததாகி விடுகிறது எனவும், தற்போது தேசிய கல்விக் கொள்கை மூலமாக மத்திய அரசு, மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையை ஒழுங்கு படுத்தும் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமல் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா என்பது மாநிலங்கள் அடங்கிய தேசம் என்பதால், ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்ற தத்துவம் கொண்டு வர முடியாது எனவும், நாடு முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை என்பது பொருத்தமற்றது எனவும் கூறப்பட்டுள்ளது.
கல்வி கடைக்கோடி வரை சென்றடைவதை மாநில அரசுகள் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்பதால் கல்வியை இன்னும் பொதுப்பட்டியலில் நீடிக்க செய்வது கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுடன் பல்வேறு சமூக - கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவில், கூட்டாட்சி கட்டமைப்பின் அடிப்படையில் தேசிய வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் பங்களிப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனித வளர்ச்சிக்கு முதன்மையான கல்விக்கு நிதி ஒதுக்குவது உள்ளிட்டவற்றுக்கு மத்திய - மாநில அரசுகள் இணைந்து முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி கொண்டு வரப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் இல்லை எனவும் மாறாக பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே உதவியுள்ளது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் சட்ட திருத்தம், கல்வியின் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வகை செய்துள்ளது என்பதால், தேசிய கல்விக் கொள்கை, மாநில அரசுகளின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்து விடுவதாக கூறுவது தவறு எனவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை, நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வு, நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
மற்றொரு வழக்கு
தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.
தனக்கு எதிராக திமுக வேட்பாளர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார், 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், அரசு இயந்திரத்தை தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்ததாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பை மீறி செலவிட்டுள்ளதாகவும், தபால் வாக்குகள் காரணமின்றி நிராகரிக்கப்பட்ட்டுள்ளதாகவும் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தேர்தல் வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தரப்பில், உரிய ஆதாரங்களுடன் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்க கூடாது எனவும், விசாரணையின் போது தான் இந்த ஆதாரங்களை நிரூபிக்க முடியும் என வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தேர்தல் வழக்கை விசாரிக்க போதுமான அதாரங்கள் உள்ளதாக கூறி, செங்குட்டுவன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion