வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய வரவு! க்யூட்டாக குட்டியை பெற்றெடுத்த நீர்யானை..!
Hippopotamus : சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில், நீர்யானை குட்டி ஈன்றுள்ளது.
அழிந்து வரும் உயிரினமாக கருதக்கூடிய நீர்யானை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் குட்டி ஈன்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்கா
சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக, வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் , வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். வார நாட்களில் 2500 முதல் 3000 வரையிலும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பத்தாயிரம் பார்வையாளர்கள் வரை வந்து செல்கின்றனர்.
பலவகை விலங்குகள் ( vandalur zoo animals )
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
நீர் யானைகள் -- Hippopotamus
யானைகள் மற்றும் காண்டாமிருகங்களுக்கு அடுத்தபடியாக, நீர்யானைதான் நிலத்தில் வாழும் பெரிய பாலூட்டியாகும். இப்பொழுது இருக்கும் நீர்யானை சுமார் 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் உருவானது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் . ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட நீர்யானைகள் அதன் பிறகு பல்வேறு நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் ஆப்பிரிக்காவில் நீர்யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நீர் யானைகளுக்கும் தனி குரல் ஒலி இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் மூலம் நீர் யானைகள் பிற நீர்யானைகளுடன், தொடர்பு கொள்கின்றன. நீர் யானைகளால் தன் கூட்டத்தை சேர்ந்த நீர்யானை மற்றும் அறிமுகமில்லாத நீர்யானைகளை அதன் குரலோசையைக் கொண்டு அடையாளம் கண்டு பிரித்துக் விடுவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே நடைபெறும் மோதலில், நீர்யானை மனிதர்களுக்கு இடையே நடைபெறும் மோதல் பிரதான இடத்தை பிடித்துள்ளது. இதுபோன்று நடைபெறும் மோதலில் நீர்யானை தாக்குவதால், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
வண்டலூர் பூங்காவில்..
அரிய வகை உயிரினமாக உள்ள நீர்யானை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரகுர்தி என்ற பெண் நீர்யானை தற்பொழுது குட்டி ஈன்றுள்ளது. இந்த குட்டி தற்பொழுது தாயுடன் வளம் வரும் காட்சிகள் வெளியாகி, விலங்கு ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குட்டியுடன் க்யூட்டாக வளம் வரும் , நீர்யானை பார்ப்பதற்கு ரம்யமான காட்சியாக உள்ளது.
இது குறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , வனவிலங்குகளை பாதுகாப்பதில் முன்னனாடியாக விளங்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, நீர்யாளனக்குட்டி பிறந்திருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது . பிரகுர்தி என்ற பெண் நீர்யானை 8 மாத கர்ப்பத்திற்குப் பிறகு குட்டி ஈன்றது.
இதன் தந்தை லட்சுமணன். நீர்யானை குட்டியை தாய் கவனித்து வருகிறது. பிரசவத்திற்குப் பிந்தைய நாட்களில் தாய்க்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. நீர்யாளனகள் பொதுவாக தண்ணீரில் பிறக்கும் மற்றும் தண்ணீருக்குள் பாலூட்டும் திறளனக் கொண்டுள்ளன. இந்த மகிழ்ச்சியான நிகழ்வு, அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும் , முக்கிய மைல்கல்லாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.