தீபாவளி வந்தாச்சு! துணி எடுக்க குவிந்த பொதுமக்கள் - குரோம்பேட்டையில் போக்குவரத்து நெரிசல்
சென்னை குரோம்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் தீபாவளிக்கு துணி எடுக்க பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை
போக்குவரத்து நெரிசல்
தீபாவளி சிறப்பு பேருந்துகள்
நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பண்டிகை வரும் நிலையில் மக்கள் அனைவரும் பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேசமயம் வெளியூரில் உள்ள பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ரயில்களில் கடந்த ஜூலை மாதமே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்ட நிலையில், சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட உள்ளது.
அதேசமயம் வழக்கமாக இயக்கப்படும் எஸ்.இ.டி.சி எனப்படும் அரசு விரைவு சொகுசு பேருந்துகளில் டிக்கெட்டுகள் முன்பதிவு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. அதிலும் 90% டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நடப்பாண்டு தீபாவளிக்கு நவம்பர் 9,10, 11 ஆகிய தேதிகளில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருப்பவர்கள் கவனத்திற்கு
அதன்படி மாதவரம் புதிய பேருந்து நிலையம், கலைஞர் கருணாநிதி மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு நாளும் சென்னையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட 3 நாட்களில் கூடுதலாக 4, 675 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
நவம்பர் 9 ஆம் தேதி 3,465 பேருந்துகளும், 10 ஆம் தேதி 3,995 பேருந்துகளும், 11 ஆம் தேதி 3,515 பேருந்துகள் என 10,975 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் பிற ஊர்களில் இருந்து 5,920 பேருந்துகள் என மொத்தமாக 3 தினங்களில் மட்டும் 16 ஆயிரத்து 895 பேருந்துகள் இயக்கப்படும். டிக்கெட்டை எளிதாக முன்பதிவு செய்ய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 மையங்களும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் ஒரு மையமும் என 10 மையங்கள் திறக்கப்பட்டு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 68 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.