தலைகீழாய் மாறும் GST சாலை.. இருசக்கர வாகன ஓட்டிகளே உங்களுக்குத்தான்..! இன்னும் ஒரே மாதம்தான்
Two Wheeler Priority Signal in GST Road: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய இடங்களில், இருசக்கர வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன.

Traffic congestion: சென்னை புறநகர் பகுதிகளில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது, பொதுமக்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
சென்னை போக்குவரத்து நெரிசல்
சென்னை மாநகரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர, பல்வேறு நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தேவையான மாற்று பாதைகள், தேவையான இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்ட பிறகும், ஒரு சில காரணங்களால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஸ்மார்ட் டிராபிக் சிஸ்டம் (smart traffic system)
எனவே, சென்னையில் " ஸ்மார்ட் டிராபிக் சிஸ்டம் " (smart traffic system) மூலம் போக்குவரத்தினை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் சென்னையில் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக U-Turn அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.
வெற்றி பெற்ற முயற்சி
பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைக்கப்பட்ட U-TURN பெருமளவில் கை கொடுத்துள்ளது. இதனால் அப்பகுதியில் 10 நிமிடம் வரை பயண நேரம் குறைந்துள்ளது. அப்பகுதியில் தற்போது காமாட்சி மருத்துவமனை சிக்னலில் நடைபாதை சிக்னல் மட்டுமே தற்போது உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பல இடங்களில் U-TURN அமைத்து, சிக்னல்களை முழுமையாகவும் அல்லது பகுதியாக மூட போக்குவரத்து போலீசார் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
புதிய முயற்சியை கையில் எடுத்த போக்குவரத்து போலீசார்
சென்னை மாநகர் முழுவதும் 65 சிக்னல்கள், 15 நிமிடங்கள் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதை கணக்கெடுத்துள்ளனர். இந்த சிக்னல்களில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க, தொடர் ஆலோசனைகளும் பல்வேறு புதிய நடவடிக்கைகளையும் போக்குவரத்து போலீசார் எடுத்து வருகின்றனர். இதன் மூலம் அண்ணா சாலையில் முதல் கட்டமாக 8 இடங்களில் சிக்னல் நீக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களுக்கு முன்னுரிமை - Two Wheeler Priority Signal
இதேபோன்று தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசாரும் பல்வேறு போக்குவரத்து சீர்திருத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து திட்டங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (ஜிஎஸ்டி சாலை) உள்ள முக்கிய சிக்னல்களில் இரு சக்கர வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம் நான்கு சக்கர வாகனங்களுக்கு முன்பாக, 30 வினாடிகள் முன்கூட்டியே சிக்னல் இருசக்கர வாகனங்களுக்கு என பிரித்யேகமாக திறந்து விடப்படும். குறிப்பாக இந்த சிக்னல்களில், பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்பவர்களுக்கு வரப்பிரசாதம் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று இந்த திட்டத்தால் பெரும் அளவு போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு மட்டும் இல்லாமல், கார்களில் செல்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல், இந்த முறை தடுக்கும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில், இருசக்கர வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், டிராபிக் சிக்னல் அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்குள் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















