குறைந்த விலையில் நிலம் வாங்க ஆசையா ? எச்சரிக்கை ! மறைந்திருக்கும் ஆபத்துகள் என்ன தெரியுமா ?
வழிகாட்டி மதிப்பு , மனை அங்கீகாரம் , நில வகைபாடு , விஷயங்களில் பிரச்சனை இருக்கும் நிலங்களை உரிமையாளர்கள் விலையை குறைத்து விற்க முன்வருவது வழக்கம்

சொத்து வாங்கும் போது விலை பேரம்
பொதுவாக எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதில் விலையை குறைத்து கேட்பது பரவலாக காணப்படும் பழக்கம் தான். அதே நேரத்தில் தரமான பொருள் வேண்டும் என்பதில் சமரசம் செய்து கொள்ளாமல் அதில் எந்த நிறுவனம் குறைந்த விலைக்கு கொடுக்கும் என்று பார்ப்பது வழக்கமான நடைமுறை தான்.
சொத்து வாங்குவதிலும் , குறைந்த விலையை தேடும் பழக்கம் கட்டாயம் தலைத்தூக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதன் விலையை குறைத்து கேட்டு பணத்தை மிச்சப்படுத்துவது எந்த விதத்திலும் தவறு இல்லை.
தரகர்களின் அவசரம்
குறைந்த விலை என்பதற்காக தர மற்ற பொருளை வாங்கி விட கூடாது என்பதில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக நிலம் வாங்கும் போது குறைந்த விலை என்ற வார்த்தையை பயன்படுத்தி தரகர்கள் உங்களை முடிவு எடுக்க அவசரப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.
இயல்பாக ஒரு சதுர அடி 1,200 ரூபாய் என்று விற்கப்படும் பகுதியில், 800 ரூபாய்க்கு ஒருவர் நிலத்தை கொடுக்க முன் வருகிறார் என்றால், அது நமக்கு லாபம் தானே என்று தோன்றும். ஆனால், சந்தை நிலவரப்படி அனைவரும் சதுர அடி, 1,200 ரூபாய்க்கு விற்கும் இடத்தில் ஒருவர் மட்டும் 800 ரூபாய்க்கு விற்பதற்கான காரணத்தை புரிந்து கொள்வது அவசியம்.
பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்
இன்றைய சூழலில், யாரும் தனக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் விலையை குறைத்து நிலத்தை உங்களுக்கு கொடுக்க மாட்டார்கள் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இத்துடன் ஒருவர் விலையை குறைத்து கொடுக்கிறார் என்றால் அதன் பின்னணி குறித்து தெளிவாக விசாரிக்க வேண்டும்.
குறிப்பாக வழிகாட்டி மதிப்பு பிரச்சனை, மனை அங்கீகார பிரச்னை, நில வகைபாடு குளறுபடி போன்ற காரணங்கள் இருக்கும் போது நிலத்தின் விலையை உரிமையாளர்கள் குறைப்பது வழக்கம். இது மட்டுமல்லாது அதன் உரிமை தொடர்பான பிரச்னை எதுவும் இருந்தாலும் விலை குறைப்பு சாத்தியம்.
அவசரப்பட்டு வாங்கினால் பல்வேறு சிக்கல்
ஒருவர் தானாக குறைந்த விலையில் மனையை விற்க வந்தால் அதில் என்ன வில்லங்கம் இருக்கிறது என்று தெளிவாக ஆராய்ந்து பாருங்கள். அதை விடுத்து குறைந்த விலைக்கு கிடைக்கிறதே என்று யாரிடமும் விசாரிக்காமல் அவசரப்பட்டு வாங்கினால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
பட்டா தொடர்பான பிரச்னைகள் இருக்கும் இடங்களில் குறைந்த விலை என்பதற்காக அவசரபட்டால் அதை சரி செய்வதற்கு அதிக செலவு ஏற்படும். பிற்காலத்தில் ஏற்படும் செலவுகளை மறைத்து தான் சிலர் இவ்வாறு குறைந்த விலைக்கு விற்பனை செய்வர் என்பதை புரிந்து செயல்படுங்கள் என்கின்றனர் ரியல் எஸ்டேட் துறை வல்லுநர்கள்.





















