Diwali Special Bus: சென்னை திரும்ப காத்திருக்கும் மக்களே ரெடியா..? 3000 பேருந்துகள்..களமிறங்கிய போக்குவரத்து கழகம்!
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மக்கள் திரும்ப போக்குவரத்து கழகம் சார்பில் இன்று சுமார் 3,778 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நேற்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. இதனால் சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊரை நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முதல் படையெடுத்து சென்றனர். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பெரியளவில் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகையை சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பெரியளவில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வந்ததால் வார இறுதி நாட்கள் விடுமுறையுடன் அனைவரும் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்தனர். தீபாவளிக்குச் சொந்த ஊர் திரும்பிய மக்கள் 21.10.2022 முதல் 23.10.2022 வரை 3 நாட்கள் சுமார் 20 லட்சத்திற்கு அதிகமானோர் தங்களது சோந்த ஊர் திரும்பினர் . இதனால் அந்த மூன்று நாட்களும் கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோயில், பரனூர், விக்கரவாண்டி சுங்கச்சாவடி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. மிகவும் அதிகப்படியான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்லும் சூழல் உருவானது.
இந்தநிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மக்கள் திரும்ப போக்குவரத்து கழகம் சார்பில் இன்று சுமார் 3,778 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றனர். வழக்கமாக, ஒரு நாளைக்கு 2,100 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 1, 678 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,778 பேருந்துகள் இன்று இயக்கப்பட இருக்கின்றனர். அதேபோல், நாளை (அக்.26ம் தேதி) 2,954 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் சென்னைக்கு விடப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் சென்னைக்கு திரும்ப சுமார் 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டு இருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் இன்றும் நாளையும் அதிகளவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தனியார் ஆம்னி பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்து வருகின்றனர்.
இதுதவிர, பிற மாவட்டங்களுக்கு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 3,790 சிறப்பு பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவும் தற்போது நடைபெற்று வருகிறது.