விலையில்லாப் பொருட்களை பள்ளிகளுக்கே நேரடியாக வழங்குக: அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை
விலையில்லாப் பொருட்களை பள்ளிகளுக்கே நேரடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது.
விலையில்லாப் பொருட்களை பள்ளிகளுக்கே நேரடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் கடந்த 2 ஆண்டுகளாகப் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின.
இந்த நிலையில் 2022-23ஆம் கல்வி ஆண்டில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதமே புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் விலையில்லாப் பொருட்களை பள்ளிகளுக்கே நேரடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது. அதில் கூறப்படுள்ளதாவது:
''அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய விலையில்லாப் பொருட்களெல்லாம் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டும் என ஆணை அண்மையில் அமல்படுத்தப்பட்டது. அதற்காக நிதியும் (மிகக் குறைவான அளவு நிதி மட்டுமே) ஒதுக்கப்பட்டது. எனினும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, இந்தப் பொருட்கள் நேரடியாக வழங்கப்படுவதில்லை.
ஒரே நேரத்தில் கிடைக்காத புத்தகங்கள்
ஆசிரியர்கள் நேரடியாக எடுக்கச் சென்றாலும், ஒரே நேரத்தில் அனைத்துப் புத்தகங்களும் அங்கு இருப்பதில்லை. புத்தகங்கள் வழங்கப்பட்டாலும் குறிப்பேடுகளும், சீருடைகளும், காலணிகளும், எழுதுபொருட்களும் இதுவரை ஒரே சமயத்தில் கிடைத்ததில்லை. இந்த நிலை தற்போதும் தொடர்கிறது.
இப்பொருட்களை எடுப்பதற்காக மட்டும் ஆசிரியர்கள் பள்ளியை விட்டு, குறைந்தபட்சம் 5 தடவைக்கு மேலாக அலுவலகமோ அல்லது வழங்கப்படும் இடத்திற்கோ செல்ல வேண்டியதாக இருக்கின்றது.
விடுபடும் பொருட்கள்
இதிலும் விடுபடுகின்ற சில பொருட்களைப் பெற மற்றுமொரு நாளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனை ஒரே நேரத்தில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன் பாடம் நடத்துகின்ற ஆசிரியர்களுக்கு தனியே பாடப்புத்தகம் (Table copy) இதுவரை வழங்கப்பட்டது கிடையாது. எனவே ஆசிரியர்களுக்கும் ஒரு பாடப்புத்தகத்தை இணைத்து அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்''.
இவ்வாறு தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது.
*
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்