Disha Mittal IPS Transfer : ’கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தென் சென்னை இணை ஆணையர் திஷா மிட்டல்’ அண்ணாமலைதான் காரணமா..?
’உதயநிதி பற்றி விமர்சித்த பாஜகவினரிடம் கடுமை காட்டாமல் மென்மையான போக்கை கடைபிடித்ததாக கூறப்படுகிறது’
தென் சென்னை இணை ஆணையர் திஷா மிட்டல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்
சென்னை மயிலாப்பூர் மாவட்ட துணை ஆணையராக இருந்த திஷா மிட்டல் கடந்த ஜனவரி மாதம் பதவி உயர்வு பெற்று தென் சென்னை கிழக்கு மாவட்ட இணை ஆணையராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அவரை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணாமலை போராட்டத்தை சரியாக கையாளவில்லை ?
நேற்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோர் அண்ணாமலை தலைமையில் திடீரென பிரதான சாலையில் அமர்ந்ததால் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஸ்ம்பித்தது. இதன் காரணமாக அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு செல்வோரும் மருத்துவமனைகளுக்கு சென்றோரும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அண்ணாமலை போராட்டத்தை சரியாக கையாளவில்லை என்று கூறி திஷா மிட்டலை உள்துறை செயலாளர் அமுதா காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றியதாக கூறப்படுகிறது.
நேற்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் அண்ணமலை தலைமையிலான போராட்டத்தை சரியாக கையாளாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக இருந்த குற்றச்சாட்டில், தென் சென்னை இணை ஆணையர் திஷா மிட்டல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் @abpnadu pic.twitter.com/6bCDfduPNd
— Raja Shanmugasundaram (@SRajaJourno) September 12, 2023
சாலை மறியலால் ஸ்தம்பித்த நுங்கம்பாக்கம்
செந்தில்பாலாஜி நிலை அடுத்து உதயநிதிக்கு வரும், அவர் கைது செய்யப்படுவார் என்றெல்லாம் அண்ணாமலை பேசிவிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது அண்ணாமலை உள்ளிட்ட பாஜக-வினரை தடுத்து கைது செய்யாமல் அவர்களை பிராதன சாலை வரை செல்ல திஷா மிட்டல் அனுமதித்தால்தான், அண்ணாமலை திடீரென வள்ளுவர்கோட்டத்தின் முக்கிய சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார் என்று அதனாலேயே மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர் என்றும் கூறப்பட்டது. அதோடு, உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்ட ஆளுங்கட்சியினரை கடுமையாக விமர்சித்து பேசிய பாஜகவினரிடம் கடுமை காட்டாமல் திஷா மிட்டல் மென்மையாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
போக்குவரத்தை சரி செய்த கூடுதல் ஆணையர்
அதன்பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்னை சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் எடுத்த நடவடிக்கைகளுக்கு பிறகே போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இவை அனைத்தையும் உளவுத்துறை உள்துறை செயலாளர் அமுதாவிடம் அறிக்கையாக சமர்பித்ததாகவும் அதன்பிறகே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு திஷா மிட்டல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது.