Chennai Metro Rail: 5 ரூபாய் இருந்தா போதும்! சென்னை மெட்ரோ ரயிலில் ஈஸியா பயணிக்கலாம் - செம்ம அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணம் செய்யலாம்.
Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணம் செய்யலாம்.
சென்னை மெட்ரோ ரயில்:
சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. குறிப்பாக, பயண அட்டை, கியூ ஆர் கோடு, வாட்ஸ் அப் மூலட் டிக்கெட் எடுக்கும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சமீபத்தில் போன்பே, பேடிஎம் செயலிகளிலும் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
5 ரூபாயில் பயணம் செய்யலாம்:
இந்நிலையில், தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு, டிசம்பர் 3ஆம் தேதி மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) நிறுவன தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, க்கியூஆர் பயணசீட்டுகளில் (Static QR; Paytm; Whatsapp and PhonePe) ஒற்றைப் பயண இ-க்யூஆர் பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தை வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள தினத்தை நினைவுகூரும் வகையில் மற்றும் பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேகக் கட்டண சலகை வழங்கப்படுகிறது.
மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிசம்பர் 3, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று க்யூஆர் பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம். இந்த பிரத்யேகக் கட்டணம் டிசம்பர் 3, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு (Static QR; Paytm; Whatsapp and PhonePe) மட்டுமே பொருந்தும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு
முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சென்னை மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மீதான அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு எங்களின் பாராட்டுக்கு அடையாளமாக இந்த சிறப்பு கட்டணத்தை வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.