Corona Strict Guidelines: : தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் முகாம்களுக்கு செல்ல நேரிடும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தேவையின்றி வெளியே சுற்றினால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்படுவர் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று காரணமாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரம் நபர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், 335 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று 5 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 18 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
“கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டலத்திற்கு இரண்டு எண்ணிக்கையில் மண்டல அமலாக்கக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது நாள்தோறும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதத் தொகையையும், விதிகளை மீறி நடத்தப்படும் கடைகளை மூடி சீல் வைத்து அதன் உரிமையாளர்களிடம் அபாரதத்தையும் வசூலித்து வருகிறது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சென்னை மாநகராட்சியால் 200க்கும் மேற்பட்ட முன்கள தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்ய்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தாரும் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி, அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களில் ஒரு சிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வருவதாக புகார்கள் வருகிறது. இந்த செயலினால் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மருத்துவர் அறிவுறுத்திய நாட்கள் வரை வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதனை மீறி வீடுகளை விட்டு வெளியே வருபவர்களிடம் சென்னை மாநகராட்சி மூலம் முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும், இரண்டாவது முறை மீண்டும் வீடுகளை விட்டு வெளியே வருவது கண்டறியப்பட்டால் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 044 25384520 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.