நள்ளிரவில் தவித்த பெண் !! அரசுப் பேருந்து அலட்சியம் !! ரூ.20,000 இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு
பயணத்தின் போது நள்ளிரவில் பெண் பயணியையும் , அவரது குழந்தையையும் தவிக்க விட்டு சென்றதால் பாதிக்கப்பட்ட பயணிக்கு போக்குவரத்து கழகம், 20,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு

பேருந்து பயணத்தின் போது நள்ளிரவில் பெண் பயணி தவிப்பு
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சந்திரனின் மனைவி பூங்கொடி, தன் 9 வயது மகள் தக்ஷிதாவுடன் 2023 செப்டம்பர் 29 ம் தேதி இரவு கோயம்பேட்டில் இருந்து போளூருக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தார். வழியில் வந்தனங்கூர் அருகே பயணியருக்காக பேருந்து நிறுத்தப்பட்டது. இயற்கை உபாதை கழிக்க, தன் மகளுடன் சென்ற பூங்கொடி திரும்பி வந்த போது பேருந்து புறப்பட்டு சென்றிருந்தது.
அவர், மற்றொரு பேருந்தில் சென்று, தான் பயணித்த பேருந்தை பிடித்தார். போளூர் பேருந்தில் தன் உடைமைகளில் இருந்த ஹெட்செட், 1,500 ரூபாய் காணாமல் போயிருந்தது. நள்ளிரவில் தன்னையும், தன் மகளையும் தவிக்க விட்டது குறித்து, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், பூங்கொடி வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், டி.ஆர். சிவகுமார் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் ;
பேருந்தில் பயணியர் அனைவரும் வந்து விட்டனரா என்பதை சரிபார்க்காமல், இரவில் குழந்தையுடன் பெண்ணை விட்டு சென்றது சேவை குறைபாடு. இது, பயணியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும். அரசு போக்குவரத்து கழகம் பொறுப்புடன் செயல்படவில்லை என்பதை இது காட்டுகிறது.
எனவே அரசு போக்குவரத்து கழக திருவண்ணாமலை மண்டலம் விழுப்புரம் டிவிசன், 3வது பொது மேலாளர், வந்த வாசி கிளை மேலாளர் ஆகியோர், தொலைந்து போன பொருட்களுக்கும் சேர்த்து, பாதிக்கப்பட்ட பயணிக்கு 20,000 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.





















