சென்னை To திருச்சி To மதுரை வர உள்ள புதிய சாலை திட்டம்.. அட இனி தென் மாவட்டத்திற்கு ஜாலியா போகலாம் பா...
Chennai -Madurai Express Highway: சென்னை -திருச்சி -மதுரை பசுமைவழிச் சாலை 8 வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது.
ஒரு நாடு வேகமாக வளர்ச்சி அடைவதற்கு போக்குவதற்கு மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. சாலைப் போக்குவரத்து வசதிகள், மேம்படுத்தப்படும் போது அந்த நாடு வேகமாக வளர்ச்சி அடையும். அந்த வகையில் இந்தியா முழுவதும், தொடர்ந்து சாலை வசதிகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிலும், சாலை வசதிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு - தேசிய நெடுஞ்சாலைகள்
தமிழ்நாட்டில் சுமார் 6500க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள் இணைக்கப்படுகின்றன . தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்து அதிகரித்து வருகின்றன. இதன்மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க தொடங்குகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவு சரக்கு போக்குவரத்து நடைபெறுவது, பொருளாதார ரீதியில் மாநிலத்தை உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 67 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
85 ஆயிரம் கோடி மதிப்பீட்டில்..
தொடர்ந்து தமிழ்நாட்டில் புதியதாக புறவழிச் சாலைகள், உயர்மட்ட மேம்பால சாலைகள், தரம் உயர்த்தப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் என சுமார் 25 திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 2170 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளன. பணிக்கு தோராயமாக 85 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை - திருச்சி - மதுரை விரைவுச்சாலை
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சென்னையில் இருந்து மதுரை வரைவு சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து பசுமை வழி விரைவுச் சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலில் இந்த சாலை திருச்சி வரை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுரை வரை நீட்டிக்கப்படும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை
தற்போது இருக்கும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் வாகனம் வரை சென்று வருகின்றன. இது வருங்காலங்களில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், தொடர்ந்து வாகனங்கள் அதிகரிப்பதால் ஜிஎஸ்டி சாலை திணறி வருகிறது.
நான்கு மணி நேரத்தில் திருச்சி
இதனால் சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்பவர்கள் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக சுமார் 310 கிலோமீட்டர் நீளமுள்ள சென்னை முதல் திருச்சி வரை விரைவு சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளனர். மூலம் தற்போது திருச்சிக்கு செல்வதற்கு சென்னையிலிருந்து 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது. இந்த சாலை அமைந்தால் நான்கு மணி நேரத்தில் திருச்சியை சென்று அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, திருச்சியிலிருந்து மதுரை தூத்துக்குடி மற்றும் பிற தென் மாவட்டங்களில் இணைக்கும் சாலைகளும் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 470 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பீடு 26,500 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை அமைப்பதற்கான சாத்திய பொறுமை மற்றும் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.