Chennai Train: நாளைக்கு திருப்பதி போறீங்களா? அப்போ இதை கண்டிப்பா பாருங்க...தெற்கு ரயில்வே சொன்ன முக்கிய தகவல்!
பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 13ஆம் தேதி (நாளை) 9 மின்சார ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Train: பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 13ஆம் தேதி (நாளை) 9 மின்சார ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை:
சென்னையின் உள்புறமும், புறநகரங்களில் இருந்து சென்னைக்குள் வருவதற்கும் மின்சார ரயில்களின் போக்குவரத்து சேவை மிகவும் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகிறது. சென்னையில் புறநகர் ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து சென்னைக்கும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், கடற்கரை-மயிலாப்பூர், கடற்கரை-வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை உள்ளது. இதற்கிடையில், வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவையை நீட்டிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
9 மின்சார ரயில்கள் ரத்து:
இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 13ஆம் தேதி (நாளை) 9 மின்சார ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவித்திருப்பதாவது, ”சென்னை மூர் மார்க்கெட் - அரக்கோணம், சென்னை மூர் மார்க்கெட் - திருத்தணி செல்லுக்கூடிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரக்கோணம் - சென்னை மூர் மார்க்கெட், திருத்தணி - சென்னை மூர் மார்க்கெட் உள்ளிட்ட மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மூர் மார்க்கெட்டில் இருந்து திருப்பதி செல்லும் மின்சார ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், மூர் மார்க்கெட் - திருத்தணி, திருத்தணி - மூர் மார்க்கெட் செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக" சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
அண்மையில் வந்த அறிவிப்பு:
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்காக ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயில்கள், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் என்று அறவிப்பு வெளியானது. இதனால் அடுத்த 7 மாதங்களுககு சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, கடற்கரை - பூங்கா நகர் வரையிலான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி செல்பவர்கள் இனிமேல் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து தான் செல்ல முடியும். அதேபோல, சென்னை கடற்கரை வரை உள்ள ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பேருந்தில் தான் செல்ல முடியும்.