வரும் 20 , 21 , 22 - ம் தேதிகளில் இந்த மாவட்டங்களில் கன மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. இதன் விவரங்களை கீழே காணலாம்

இன்று கன மழைக்கு வாய்ப்பு
இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதன் காரணமாக, கடலோர தமிழகத்தில் அனேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
அதன் படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். அதே போன்று கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென் மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை
தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை (செவ்வாய் கிழமை) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 20 , 21 , 22 ம் தேதியில் கனமழைக்கு வாய்ப்பு
நாளை மறுதினத்தை (புதன்கிழமை) பொறுத்தவரையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 20-ந் தேதி கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
21 மற்றும் 22-ந் தேதிகளில் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மின்னலுடன் கூடிய மிதமான மழை
சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் குறைந்து, ஊட்டி, கொடைக்கானல் போன்று ரம்மியமான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.
நேற்று மதியம் 1 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழையும், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் 4 செ.மீ. மழையும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 3 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. மேலும் சிதம்பரம், வேதாரண்யம், தரங்கம்பாடி, கோடியக்கரை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்துள்ளது.





















