Chennai Sangamam: பாரம்பரிய கலைகள்! சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில் நடைபெறும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படடு வருகிறது. இந்த நிலையில், 2024ம் ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தீவுத்திடலில், தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா”-வை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா:
சென்னை மாநகரில் தீவுத்திடல் கொளத்தூர் – மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் – முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா, இராயபுரம் – ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் – நாகஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் – மாநகராட்சி விளையாட்டு திடல், திருவல்லிக்கேணி – பாரத சாரண சாரணியர் திடல், தி.நகர் – நடேசன் பூங்கா எதிரிலுள்ள மாநகராட்சி மைதானம், பெசன்ட் நகர் – எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை – மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம்,
கே.கே. நகர் – சிவன் பூங்கா, வளசரவாக்கம் – பழனியப்பா நகர், லேமேக்ஸ் பள்ளி வளாகம், அண்ணா நகர் – கோபுரப் பூங்கா, கோயம்பேடு – ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் – எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் – அரசு அருட்காட்சியகம் ஆகிய 18 இடங்களில் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா வரும் 17ந் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறும்.
பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்:
சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில், செவ்வியல் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு, காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை, ஆலியாட்டம், சேவையாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த விழாவில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் வேலு, பரந்தாமன், தமிழரசி, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் உள்பட பலரும் பங்கேற்றனர்.