Chennai Rains: சென்னையில் திடீர் மழை! கடும் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் திடீரென மழை பெய்து வருவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஜூன் மாதம் பிறந்தது முதலே பரவலாக மழை பெய்து வந்த நிலையில், சமீபநாட்களாக மழை அவ்வப்போது பெய்து வந்தது. இந்த நிலையில், சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென தற்போது மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணாநகர், வடபழனி, தேனாம்பேட்டை கோயம்பேடு, அண்ணாசலை, பாரீஸ், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திடீரென மழை பெய்து வருவதாலும், சென்னையின் பல பகுதிகளில் மெட்ரோ பணி நடைபெற்று வருவதாலும் சாலைகளில் மழைநீர் சில இடங்களில் தேங்கியுள்ளது. இதனால், அண்ணாசாலை உள்ளிட்ட பல முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளான காஞ்சிபுரம், நெமிலி, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருத்தணி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாமக்கல், சேலம், பெரம்பலூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள காரணத்தால், போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.