சென்னை சொத்து வரி ; செலுத்தத் தவறினால் கடும் நடவடிக்கை ! மாநகராட்சி எச்சரிக்கை
சென்னையில் சொத்துவரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு எச்சரிக்கை கொடுத்த சென்னை மாநகராட்சி.

2 லட்சம் பேர் சொத்து வரி நிலுவை
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி , தொழில் வரி ஆகியவை பிரதான வருவாயாக உள்ளது. சுமார் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் வருவாய் கிடைக்கிறது. அதன்படி , சென்னை மாநகராட்சிக்கு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30 - ந் தேதி வரையிலும் , 2-வது அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 1-ந்தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரையிலும் செலுத்த வேண்டும்.
2025-26-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் முதல் வசூலிக்கப்பட்டு வந்தது. மாநகராட்சியின் வரி வசூலிப்பாளர்கள் மூலமும் , இணையதளம் வாயிலாகவும் வரி வசூல் நடைபெற்றது. முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வருவாய் ரூ.1,300 கோடி வரையில் வசூல் செய்ய மாநகராட்சி இலக்கு நிர்ணயித்தது. ஆனால் , ரூ.1,002 கோடி மட்டுமே வசூலானது. சுமார் 2 லட்சம் பேர் வரையில் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ரூ. 1 கோடிக்கு மேல் நிலுவை - வீடுகளுக்கு நேரடியாக சென்று நோட்டீஸ்
முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தாத நபர்கள் வரும் 31-ந்தேதிக்குள் சொத்து வரியை செலுத்திட வேண்டுமென மாநகராட்சி சார்பில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. வருகிற 31-ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்தாத நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது ;
சென்னை மாநகராட்சியில் 2-வது அரையாண்டுக்கான சொத்து வரி கடந்த 1-ந் தேதி முதல் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 நாட்களில் ரூ.265 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தும் நபர்களுக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீதம் , அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
இது போக , முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தாமல் உள்ள நபர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். அவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் நோட்டீஸ் அனுப்ப இருக்கிறோம். ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டுவார்கள்.
அபராதம் விதிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். அந்த வகையில் , 2-வது அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.1,400 கோடி வரையில் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.





















