காதல் சோகம்: தற்கொலை முடிவில் முடிந்த காதல் ஜோடி - அதிர்ச்சியில் உறவினர்கள்
சென்னையில் நடந்த பல்வேறு செய்திகளை கீழே காணலாம்.

காதலன் - காதலி இருவரும் தூக்கிட்டு தற்கொலை
சோழவரம் அடுத்த எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராபின் ( வயது 23 ). இவர் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுனராக சென்னையில் பணிபுரிந்தார். அப்போது அண்ணா நகரைச் சேர்ந்த திரிஷா ( வயது 20 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. இவர்களின் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வேப்பேரி சர்ச் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் இருவரும் தங்கியுள்ளனர். பின் ராபின் அறையை வெளிப் பக்கமாக பூட்டி விட்டு வெளியேறியுள்ளார். அப்போது திரிஷாவின் தோழியான ஸ்வேதாவின் வாட்ஸாப் எண்ணிற்கு ராபின் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் , தங்கும் விடுதியின் முகவரியையும் , அங்கு தங்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் திரிஷா துாக்கிட்டு தற்கொலை செய்ததாகவும் ராபின் குறிப்பிட்டிருந்துள்ளார். தகவலறிந்து திரிஷாவின் உறவினர்கள் சென்று பார்த்த போது திரிஷா தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தது தெரிய வந்தது. ராபினின் மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது , மறுமுனையில் பேசிய அவரது உறவினர்கள், ராபின் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
வீடு புகுந்து 60 சவரன் நகைகள் , ஆறு லட்சம் ரூபாய் திருடிய கொள்ளையர்கள் கைது
சென்னை குன்றத்தூர் அருகே மவுலிவாக்கம் அடுத்த மதனந்தபுரம் அன்னை வேளாங்கண்ணி நகர் 11 - வது தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி ( வயது 61 ) துணி வியாபாரம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த 28 - ம் தேதி இவரது மனைவி மற்றும் மகள், சொந்த ஊரான கரூர் மாவட்டத்திற்கு சென்றிருந்த நிலையில், வேளச்சேரியில் உள்ள சகோதரர் வீட்டில் ராமசாமி தங்கினார். மறுநாள் காலை மதனந்தபுரத்தில் உள்ள தன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 60 சவரன் நகைகள் , ஆறு லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. மவுலிவாக்கம் போலீசாரின் விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சின்னதம்பி ( வயது 24 ) தருண் ( வயது 19 ) ராஜேஷ் ( வயது 20 ) ஆகியோர் என்பது தெரிய வந்தது. பூட்டிய வீட்டை நோட்டமிட்டு , கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்கும் இவர்கள், அந்த பணத்தில் கோவா , புதுச் ♪சேரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், 35 சவரன் நகைகள், 45,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கத்தியை காட்டி , மிரட்டி பணம் பறித்த பெண்
சென்னை பாடி சீனிவாச நகர் , பெரியார் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராம் பாய் ( வயது 75 ) வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க, மூதாட்டி ராம் பாய் அப்பகுதியில் உள்ள கடைக்கு நேற்று முன்தினம் நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த பெண் ஒருவர், ராம் பாயின் கையில் இருந்த பர்சை பறிக்க முயன்றுள்ளார். ராம் பாய் பர்சை விடாமல் பிடித்துக் கொள்ள, அப்பெண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பர்சை பறித்து தப்பினார். இது குறித்து கொரட்டூர் போலீசார் விசாரித்தனர். இதில் மூதாட்டியிடம் பணம் பறித்தது திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த தேவி ( வயது 45 ) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





















