Chennai Metro: 9.1 கி.மீ-க்கு கிட்டத்தட்ட எல்லாம் ரெடி.. போரூர்-பூந்தமல்லி மெட்ரோ.. இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி!
பூந்தமல்லி முதல் முல்லைநகர் வரை 2.5 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக நடந்து முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் பூந்தமல்லி-போரூர் வெற்றிகரமாக நடந்து முடிந்தது

பூந்தமல்லி மற்றும் போரூர் இடையிலான 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பாதையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக நடந்து முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட சோதனை நடைப்பெற்றது.
பூந்தமல்லி மெட்ரோ சோதனை ஓட்டம்:
சென்னை மெட்ரோவின் , 2 ஆம் கட்ட மெட்ரோ பணியானது தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் பூந்தமல்லி மற்றும் போரூர் இடையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமான பணியானது 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இந்த மெட்ரோ கட்டுமான பணி நிறைவடைந்து, வரும் டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டது. இந்நிலையில், பூந்தமல்லி முதல் முல்லைநகர் வரை 2.5 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக நடந்து முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் பூந்தமல்லி-போரூர் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பூந்தமல்லி- போரூர் இடையே 9.1 கிலோ மீட்டர் தொலைவிலான பாதையில் 2ம் கட்ட ஓட்டுநர் இல்லா சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த சோதனை ஓட்டத்தில் மெட்ரோ ரயில் சுமார் 35- 40 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது
சோதனை ஓட்டம் வெற்றி:
இந்த சோதனை ஓட்டம் குறித்து சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளதாவது “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டம் வழித்தடம் 4-ல் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் வரை இரண்டாம் கட்டப் பிரிவின்முதல் வழித்தட சோதனை மற்றும் மெட்ரோ இரயில் ஓட்டத்தை தொடர்ந்து, இன்று (28.04.2025), போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.மு.அ.சித்திக், இ.ஆ.ப., சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், நிதி இயக்குநர் திரு. எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்கத்தின் இயக்குநர் திரு.மனோஜ் கோயல், தலைமைப் பொது மேலாளர்கள் திரு. ஏ.ஆர்.ராஜேந்திரன், (மெட்ரோ இரயில், சமிக்ஞை மற்றும் தொலைத் தொடர்பு), திரு. எஸ்.அசோக் குமார், (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), ஆலோசகர் திரு.எஸ்.ராமசுப்பு (மெட்ரோ இரயில் இயக்கம்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. மு.அ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள், "இரண்டாம் கட்ட திட்டம் வழித்தடம் 4-ல் உயர்மட்ட வழித்தடத்தில் இன்று நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வழித்தட சோதனை மெட்ரோ இரயில் திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கி நாங்கள் சீராக முன்னேறி வருகிறோம்” என்று கூறினார். இந்த உயர்மட்ட வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து போரூர்சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை சுமார் 10 கி.மீ. நீளம் கொண்டது மற்றும் பூந்தமல்லி மெட்ரோ பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சோதனை மற்றும் செயல்பாட்டுக்கு, பூந்தமல்லி மெட்ரோ பணிமனை இந்த பகுதியின் மெட்ரோ இரயிலுக்கான சோதனைகளை ஒருங்கிணைக்கும் மையமாக இருக்கும். படிப்படியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில் வழித்தட சோதனைகளுக்கு புதிய பிரிவுகளைச் சேர்க்கும், இதன் மூலம் முதற்கட்டமாக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















