Porur Kodambakkam Metro: காரிடர் 4, போரூர் டூ கோடம்பாக்கம் 13 கி.மீ., டிராக் அமைக்கும் பணிகள் - சென்னை பயணமே ஈசி தான்
Porur Kodambakkam Metro: மெட்ரோ திட்டத்தில் போரூர் மற்றும் கோடம்பாக்கம் வழித்தடத்தில் டிராக் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Porur Kodambakkam Metro: போரூர் மற்றும் கோடம்பாக்கம் வழித்தடத்தில் 13 கிலோ மீட்டர் நீளத்திற்கு டிராக் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
போரூர் - கோடம்பாக்கம் மெட்ரோ பணிகள்:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் போரூர் சந்திப்பு தொடங்கி கோடம்பாக்கம் வரையிலான, வழித்தடத்திற்கு டிராக் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வடபழனி வழியாக போரூர் சந்திப்பிலிருந்து கோடம்பாக்கத்தை இணைக்கும் இந்த உயர்மட்ட பாதையானது 6.5 கிலோ மீட்டர் தூரத்திற்கானதாகும். இருவழிப்பாதையாக டிராக் அமைக்கப்படுவதால் தான், மொத்தம் 13 கிலோ மீட்டருக்கு டிராக் அமைக்கப்படுகிறது. ஆயிரம் விளக்கு முதல் பூந்தமல்லி வரையிலான காரிடர் நான்கின் ஒரு அங்கமாகவே, போரூர் டூ கோடம்பாக்கம் இடையேயான மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முக்கியத்துவம் அளிக்கப்படும் பணிகள்:
இந்த காரிடரின் தொடக்க பகுதிகளுக்கான பணிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது அதிக தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, நடப்பாண்டு டிசம்பர் மாதத்தில் பூந்தமல்லி மற்றும் போரூர் இடையேயான 9.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் சேவை முதலில் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜுலை மாதத்தில் போரூர் முதல் கோடம்பாக்கம் வரையிலான சேவைகள் தொடங்கலாம். கோடம்பாக்கம் தொடங்கி ஆயிரம் விளக்கு வரையிலான வழித்தடம் பூமிக்கு அடியில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
🚨 Track-laying work for Metro Rail Phase II begins on Porur-Kodambakkam section
— Namma Chennai (@NammaChennai_) May 20, 2025
The 6.5-km Porur-Kodambakkam elevated metro (Corridor 4) may open by July next year. The 9.1-km Poonamallee-Porur stretch may be ready by Dec. Track laying for 13 km is planned. pic.twitter.com/vh1JKGRkhg
8 மெட்ரோ ரயில் நிலையங்கள்:
இருவழிப்பாதையாக போரூர் சந்திப்பிலிருந்து கோடாம்பாக்கம் வரையில் 13 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ டிராக் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், சாலிகிராமம் வேர்-ஹவுஸ், சாலிகிராமம், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பவுர்-ஹவுஸ் ஆகிய 8 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. கட்டுமான பணிகளில் உள்ள சிரமங்கள் மற்றும் குறுகலான சாலை காரணமாக, போரூர் - கோடம்பாக்கம் இடையேயான வழித்தடம் ஏற்கனவே தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக ஆலப்பாக்கம் முதல் ஆழ்வார்திருநகர் பகுதி இடையே, 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு டபுள்-டெக் டிராக் அமைவதும் தாமதத்திற்கு காரணமாக உள்ளது.
முழு வேகத்தில் பணிகள்:
இதனிடையே, சாலிகிராமம் முதல் வடபழனி வரையில் ட்ராக் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்ததும் ஆலப்பாக்கம் மற்றும் காரம்பாக்கம் இடையே டிராக் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான பணிகள் முற்றிலும் பூர்த்தியடைந்ததும், தற்போது அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் டிராக் அமைப்பதற்கான பணியில் முழு வேகத்தில் ஈடுபட உள்ளனராம். அதன்படி, போரூர் தொடங்கி கோடாம்பாக்கம் வரையில் டிராக் அமைக்கும் பணிகளுக்கு 4 முதல் 5 மாதங்கள் வரை ஆகலாம்.
பூந்தமல்லி மற்றும் போரூர் இடையேயான மெட்ரோ வழித்தடத்தில் கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த மாத இறுதிக்குள் அந்த வழித்தடத்தின் மறுமார்கத்திலும் டிராக் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என கூறப்படுகிறது. அதன்படி, போரூரிலிருந்து பூந்தமல்லிக்கான சோதனை ஓட்டமும் விரைவில் நடத்தப்படலாம்.
சென்னை பயணம் ஈசி தான்..
திட்டமிட்டபடி, நடப்பாண்டு இறுதியில் பூந்தமல்லி டூ போரூர் மெட்ரோ சேவையும், அடுத்த ஆண்டு ஜுலை மாதத்தில் போரூர் டூ வடபழனி சேவையும் பயன்பாட்டிற்கு வந்தால், சென்னை மக்களின் பயண திட்டங்கள் மிகவும் எளிதாக மாறிவிடும். நகரிலிருந்து போக்குவரத்து நெரிசல் இன்றி குறைந்த நேரத்திலேயே பூந்தமல்லியை அடைந்து, அங்கிருந்து குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை அடையலாம். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து வட மற்றும் மேற்கு தமிழகம், கர்நாடக மற்றும் கேரளா மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுக்கின்றன. அதன்படி ஆரணி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, குடியாத்தம், தர்மபுரி, சேலம், ஓசூர், பெங்களூரு, மைசூர், சித்தூர் மற்றும் திருப்பதி போன்ற நகரங்களுக்கு பயணிப்பது மிகவும் எளிதாக மாறும்.





















