Breaking Chennai Metro: பிப்ரவரி.16 முதல் மெட்ரோ வழித்தட சுரங்கப் பணி..! எந்த ஏரியா முதல் எந்த ஏரியா வரை தெரியுமா..?
பிப்ரவரி 16 ம் தேதி முதல் 100 நாட்களுக்குள் அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடையும் என்று மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் மிகவும் பரபரப்பான நகரங்களில் ஒன்றாகவும், மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் ஒன்றாகவும் சென்னை விளங்குகிறது. இதனால், சென்னையில் எப்போதும் போக்குவரத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகளவிலும், பரபரப்பாகவும் காணப்படுகிறது. இதையடுத்து, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், அதிவேகமாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லவும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது சென்னையில் சென்னை விமான நிலையம் முதல் சைதாப்பேட்டை வரையிலும், தேனாம்பேட்டை வழியாக சென்ட்ரல் மார்க்கமாக விம்கோ நகர் வரையிலும், விமான நிலையம் – பரங்கிமலை ஆகிய இரு நிலையங்களில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு மார்க்கமாக சென்ட்ரல் வரையிலும் மெட்ரோ சேவை இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தில் பசுமை வழிச்சாலை முதல் அடையாறு சந்திப்பு வரை நாளை முதல் சுரங்கும் தோண்டும் பணி நடைபெற இருக்கிறது என்றும் பிப்ரவரி 16 ம் தேதி முதல் 100 நாட்களுக்குள் அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடையும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், பசுமை வழிச்சாலை முதல் அடையாறு சந்திப்பு வரை சுரங்கம் தோண்டும் பணிக்கு காவேரி எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்ட பணிகள்:
தற்போது, அடுத்தகட்டமாக பல்வேறு இடங்களில் மெட்ரோ சேவையை விரிவுபடுத்தும் விதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் குறித்து நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறியதாவது,
“ மெட்ரோ ரயில் சேவைக்காக கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி இடையில் நடந்து வரும் பணிகள் வரும் 2026ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்றாலும், உயர்மட்ட பாதைக்கான ராட்சத தூண்கள் அமைக்கும் பணி இந்தாண்டு இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது சாலையில் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் அதிக இடம் தேவையில்லை. பணிகள் நடக்கும் பகுதிகளில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் அப்புறப்படுத்தப்படும். இதனால், போக்குவரத்திற்கான இடம் அதிகரிக்கும். இதனால், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் குறையும். போக்குவரத்து நெரிசலும் குறையும்.” என்று கூறினார்.
மெட்ரோ 2ம் கட்ட திட்டம்:
மெட்ரோ 2ம் கட்ட திட்டப்பணி தற்போது நடைபெற இருக்கிறது. இதையடுத்து, மாதவரம் முதல் சிறுசேரி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ 2ம் கட்ட வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 2026ம் தொடக்கத்தில் படிப்படியாக 2ம் கட்ட மெட்ரோ சேவை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை 2025-ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்த பிறகு, 3 வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடம் மற்றும் மாதவரம் - கோயம்பேடு வரை 5-வது வழித்தடத்தில் 70 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 4-வது வழித்தடத்தில் 26 மெட்ரோ ரயில்களும், கோயம்பேடு முதல் எல்காட் (சோழிங்கநல்லூர் முன்பாக வரும் மெட்ரோநிலையம்) வரை 5-வது வழித்தடத்தில் 42 மெட்ரோ ரயில்களும் என்று மொத்தம் 138 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு ரயிலும் 3 பெட்டிகளைக் கொண்டிருக்கும்.