(Source: ECI/ABP News/ABP Majha)
சென்னை விமானநிலையத்தில் வழிப்பறி செய்வதே குறிக்கோள் - கொதித்து எழுந்த மயிலாடுதுறை எம்பி..
"அடையாள அட்டையை கூட டோல்கேட் ஊழியர் வாங்கி பார்க்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்"
சென்னை விமான நிலையத்தில் டோல்கேட் ஊழியர்கள் அடாவடியாக நடந்து கொண்டதாகவும், பணம் பறிப்பதே குறிக்கோளாக இருந்ததாகவும், மயிலாடுதுறை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா தனது x பக்கத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை விமான நிலையம்
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று வருவோர் என தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். வாகனங்கள் உள்ளே சென்று வர சென்னை விமான நிலைய நுழைவு வாயிலில் , டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
பெரும்பாலும் விமான நிலைய நுழைவு வாயிலில் உள்ள டோல்கேட்டில் பணிபுரியும் ஊழியர்கள் விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளிடம் தொடர்ந்து அடாவடியாக நடந்து வருவது வாடிக்கையாக இருந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
மயிலாடுதுறை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு
இந்நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா தனது X பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது : சென்னை- விமான நிலையத்தில் நுழைவு வாயில்களை நிர்வகிக்கும் டோல்கேட் ஆபரேட்டர் மற்றும் பணிபுரியும் பணியாளர்கள் அடாவடி தனத்துடன் நடந்து கொள்வது, வெட்கக்கேடானது. சென்னை விமான நிலையத்தில் மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஏற்படும் சிரமங்களையும் துன்புறுத்தலையும், ஊடகங்கள் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நான், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும், செப்டம்பர்-11 அதிகாலை டெல்லியில் இருந்து திரும்பியபோது, சென்னை-விமான நிலைய டோல்கேட் பணியாளர்களால் இரண்டாவது முறையாக தொல்லைக்கு ஆளானேன். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது வசதிகளில் கட்டணம் செலுத்துவதில், இருந்து விலக்கு அளிக்கப்பட்ட அரசியலமைப்பு அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
வழிப்பறி கொள்ளையர்கள் போல்..
இருந்தபோதிலும் செப்டம்பர் 11 ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் ரவுடிகளை போல் டோல் கேட் ஆபரேட்டர்கள் ஒரு குழு என்னை நீண்ட காலமாக தடுத்து வைத்தனர். காரணம் கேட்டதற்கு பதில் சொல்லாமல், என்னுடைய அடையாள அட்டையைப் பார்க்க மறுத்தும் வழிப்பறி கொள்ளையர்களைப் போல பணம் கேட்டனர்.
Highhandedness and unruly behaviour exhibited by the toll gate operator and his untrained employees manning the gates at #Chennai-airport is shameful and legendary. The media keeps highlighting the inconvenience caused to and harassment meted out to people as well as…
— R.Sudha (@AdvtSudha) September 11, 2024
அவர்களின் மேற்பார்வையாளரும் என்னை தொலைபேசியில் அச்சுறுத்தும் விதமாகவும் அவமரியாதையாகவும் பேசினார். இத்தகைய துன்புறுத்தலுக்கு நான் உட்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த முறை செய்தது போல் எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவர்களை விடமாட்டேன். இதை உயர் மட்டத்தில் எடுத்து சென்று அனைத்து சென்னை விமான நிலைய பயனாளர்களுக்கும் நீதியை கொண்டு வர விரும்புகிறேன்.
பார்க்கிங், நுழைவு மற்றும் வெளியேறும் போது உள்ள சிக்கல்கள், வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதாக தெரிகிறது . பயணிகள் கட்டணம் செலுத்தும் வகையில், மற்றும் ஒப்பந்ததாரர் அவரது ஆட்களின் பயிற்சியற்ற மற்றும் அடாவடி நடத்தை தொடர்பான அனைத்து புகார்கள் குறித்தும் முறையான விசாரணையை நடத்த வேண்டும் எனவும் இதை விடுவதாக இல்லை என பதிவு செய்துள்ளார்.