தொடர்ந்து ரத்தாகும் விமானங்கள்... தலைவலியில் பயணிகள்.. பின்னணியில் பிரச்சனையா ?
Chennai Flight Cancelled :இன்று ஒரே நாளில் 12 விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி.
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவதால், பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
12 விமானங்கள்- இன்று ரத்து
இந்தநிலையில் இன்றும் ஒரே நாளில், புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், அதைப்போல் 6 வருகை விமானங்கள், மொத்தம் 12 விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இவைகள் அனைத்துமே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புறப்பாடு விமானங்கள் ரத்து
சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு இன்று காலை 7.45 மணிக்கு செல்ல வேண்டிய விமானம், காலை 8.25 மணிக்கு கொல்கத்தா விமானம், காலை 9.40 மணி பெங்களூரு விமானம், காலை 10.10 மணி திருவனந்தபுரம் விமானம், பகல் 12.35 மணி சிலிகுரி விமானம், இரவு 10.45 மணி கொல்கத்தா விமானம் ஆகிய 6 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதை போல் சென்னைக்கு வர வேண்டிய காலை 9 மணி பெங்களூரு விமானம், பகல் 12 மணி புவனேஸ்வர் விமானம், பகல் 1.40 மணி திருவனந்தபுரம் விமானம், பகல் 1.45 மணி கொல்கத்தா விமானம், மாலை 6.40 மணி சிலிகுரி விமானம், இரவு 10.05 மணி கொல்கத்தா விமானம் ஆகிய 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடரும் விமானங்கள் ரத்து
இன்று ஒரே நாளில் 12 விமானங்கள், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. நிர்வாக காரணங்களால், இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை போல் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.