Chennai Rains: மஞ்சள், ஆரஞ்ச் மற்றும் ரெட் அலர்ட் என்றால் என்ன? வானிலை மையம் அப்படி சொல்வது ஏன்?
சென்னையில் மழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில் ஆரஞ்ச், மஞ்சள் மற்றும் ரெட் அலர்ட் ஆகியவற்றிற்கு உள்ள வித்தியாசங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பரவலாக பெய்து வந்த நிலையில், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
சென்னையில் கொட்டும் மழை:
சென்னையில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் தமிழக அரசு படகுகள், நிவாரண மையங்கள் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் என மழையின் அளவைப் பொறுத்து எச்சரிக்கை விடுப்பது வழக்கம். அப்படி என்றால் என்ன? ஒவ்வொன்றிற்கும் உள்ள வித்தியாசம் குறித்து கீழே விரிவாக காணலாம்.
மழையின் தீவிரத்தை உணர்த்துவதற்காகவும், அதற்காக மக்கள் மற்றும் அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மழையின் அளவைப் பொறுத்து இந்த அலர்ட் விடுக்கப்படுகிறது. மழையை லேசான மழை, மிதமான மழை, மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், ரெட் அலர்ட் என வகைப்படுத்தப்படுகிறது.
லேசான மழை:
ஒரு செ.மீட்டர் அளவிலான மழையை அதாவது 10 மில்லி மீட்டர் மழை அளவை லேசான மழை என்று குறிப்பிடுகிறார்கள்.
மிதமான மழை:
மிதமான மழை என்பது மழையின் அளவு 2 செ.மீட்டர் முதல் 6 செ.மீட்டர் வரை அளவில் பதிவாகும் மழை ஆகும்.
மஞ்சள் அலர்ட்:
7 செ.மீட்டர் அல்லது 7 செ.மீட்டருக்கு மேல் பதிவாகும் மழைப்பொழிவு கனமழை என்று கூறப்படுகிறது. 7 செ.மீட்டர் முதல் 11 செ.மீட்டர் அளவு பதிவாகும் கனமழையானது மஞ்சள் அலர்ட் என்று அழைக்கப்படுகிறது.
ஆரஞ்ச் அலர்ட்:
ஆரஞ்ச் அலர்ட் என்பது மிக கனமழையை குறிக்கும். ஒரு பகுதியில் 12 செ.மீட்டர் முதல் 20 செ.மீட்டர் அளவிற்கு பதிவாகும் மழையே மிக கனமழை ஆகும். இந்த மழை அளவை ஆரஞ்ச் அலர்ட் என்று குறிப்பிடுகிறார்கள்.
ரெட் அலர்ட்:
அதி தீவிர கனமழையே ரெட் அலர்ட் என்று வானிலை மையத்தால் எச்சரிக்கப்படுகிறது. 21 செ.மீட்டருக்கு மேல் பதிவாகும் மழைப்பொழிவானது அதி தீவிர கனமழை என்று கூறப்படுகிறது. இந்த அதிதீவிர கனமழையே ரெட் அலர்ட் என்று வானிலை மையத்தால் எச்சரிக்கப்படுகிறது.
மழையின் அளவைப் பொறுத்தும், அதற்காக விடுக்கப்படும் அலர்ட்-டைப் பொறுத்தும் அரசு அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.