Heavy Rain Alert: 24 மணிநேரத்திற்கு மிக கனமழை முதல் அதி கனமழை - சென்னையை எச்சரித்துள்ள வானிலை ஆய்வுமையம்
சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிக கனமழை முதல் அதிகனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரானசென்னையில் 2015ம் ஆண்டிற்கு பிறகு நேற்று இரவு மட்டும் சென்னையில் 21 செ.மீ. மழை பதிவாகியது. சென்னையில் பெய்த இந்த அதீத கனமழையால் சென்னையில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில், தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
“ மழைப்பொழிவு பதிவான இடங்களின் விவரங்களைப் பொறுத்தவரையில் மூன்று இடங்களில் அதி கனமழை பொழிந்துள்ளது. ஆறு இடங்களில் மிககனமழையும், 26 இடங்களில் கனமழையும் கடந்த 24 மணிநேரத்தில் பொழிந்துள்ளது. அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், காரைக்கால் மற்றும் புதுவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிககனமழையும் பெய்யக்கூடும். சில நேரங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், திருச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மீனவர்கள் இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக, தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்பு கூறியது போல, நவம்பர் 9-ந் தேதி(நாளை மறுநாள்) தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதுதொடர்ந்து வலுப்பெற்று வட தமிழக கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். இதனால், 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கன முதல் மிககனமழையும், சில சமயங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில் கடந்த 1 முதல் இன்று வரை பதிவான மழை 33 செ.மீ. ஆகும். இந்த காலகட்டத்தில் பெய்துள்ள மழை அளவானது இயல்பைவிட 43 சதவீதம் அதிகம் ஆகும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் 40 முதல் 60 கி.மீ. வரை காற்று வீசக்கூடும். “
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம், புழல் மற்றும் மதுராந்தகம் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்