டெலிவரி ஊழியரிடம் செல்போன் பறிப்பு, காதல் ஜோடி தஞ்சம் - சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவங்கள்
டெலிவரி ஊழியரிடம் போன் பறித்த நபர் , தப்ப முயற்சித்த போது கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சென்னை டெலிவரி ஊழியரிடம் செல்போன் பறிப்பு; போலீஸ் அதிரடி நடவடிக்கை
சென்னை அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் வேல்முருகன் ( வயது 52 ) டெலிவரி ஊழியர். கடந்த 29ம் தேதி இரவு பணி முடிந்து, கொன்னுார் நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது ஸ்கூட்டரில் வந்த நபர் , மொபைல் போனை பறித்து தப்பினார். அயனாவரம் போலீசாரின் விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது புளியந்தோப்பைச் சேர்ந்த பழைய குற்றவாளியான சந்தோஷ் ( வயது 21 ) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்ய முயலும் போது தப்ப முயன்று கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விசாரணைக்கு பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தீபாவளி சீட்டு நடத்தி 13 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது.
சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி ( வயது 34 ). இவர், செங்குன்றத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி ( வயது 39 ) என்பவரிடம் தீபாவளி சீட்டு கட்டியுள்ளார். ஈஸ்வரி தன் உறவினர்கள் நண்பர்கள் என 97 பேரிடம் வசூல் செய்து, பரமேஸ்வரியிடம் மொத்தம் 15.12 லட்சம் ரூபாய் சீட்டு கட்டியுள்ளார்.
கடந்த மாதம் சீட்டு முதிர்வடைந்த நிலையில், பரமேஸ்வரியிடம் சீட்டு பணத்தை திரும்ப கேட்ட போது 1.76 லட்சம் ரூபாய் மட்டுமே திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள 13.36 லட்சம் ரூபாய் கொடுக்காமல் ஏமாற்றி தலைமறைவாகியுள்ளார்.
ஈஸ்வரி உட்பட பாதிக்கப்பட்டோர், புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை கமிஷனரிடம் புகாரளித்தனர். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு செங்குன்றத்தைச் சேர்ந்த பரமேஸ்வரியை கைது செய்தனர்.
பெற்றோர் சம்மதிக்காததால், கோயிலில் திருமணம் செய்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஜோடி
சென்னையை அடுத்த கீழ்க்கட்டளையைச் சேர்ந்தவர் விஸ்வநாத் ( வயது 28 ) இவர், பரங்கிமலை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருடன் பணிபுரியும் ஈரோடைச் சேர்ந்த வைஷ்ணவி ( வயது 26 ) என்பவரை, ஓராண்டாக காதலித்து வந்துள்ளார்.
காதல் விவகாரம் வைஷ்ணவியின் வீட்டிற்கு தெரிந்து, பெற்றோர் வேறு நபருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த வைஷ்ணவி வடபழனி கோவிலில் விஸ்வநாத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
பின், மடிப்பாக்கம் காவல் நிலையம் வந்து, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால், தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் போலீசாரிடம் கூறினர். போலீசார் அறிவுரை கூறி காதல் ஜோடியை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
போலி ஆவணம் தயாரித்து ரூ.10 லட்சம் நில மோசடி - இருவர் கைது
மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 52 ) இவருக்கு நிலத்தரகர் செந்தில் மூலமாக எட்வர்ட் ராமச்சந்திரன் , ஜெயசீலன் ஆகியோர் பழக்கமாகி உள்ளனர். இவர்கள், 2024 - ல் திண்டிவனத்தில் 95 சென்ட் இடம் இருப்பதாக கூறி, இடத்தை காண்பித்து 1.50 கோடி ரூபாய் பேசியுள்ளனர்.
பின்பு , முன்பணமாக 10 லட்சம் ரூபாய் பெற்று, கிரைய ஒப்பந்தம் செய்தனர். ஆவண நகல்களை முத்துக்குமார் சரிபார்த்த போது , போலி என்பது தெரிய வந்தது. எழும்பூர் நீதிமன்ற உத்தரவின்படி , கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து , மோசடியில் ஈடுபட்ட கொடுங்கையூர், காந்தி நகரைச் சேர்ந்த எட்வர்ட் ( வயது 52 ) மாதவரம் பால்பண்ணையைச் சேர்ந்த ஜெயசீலன் ( வயது 57 ) ஆகியோரை கைது செய்தனர்.





















