Crime: பந்தல் தொழிலில் முன்விரோதம்... பந்தல்காரரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த இளைஞர் - சென்னையில் பயங்கரம்
சென்னையில் பந்தல் தொழிலில் ஏற்பட்ட முன்தகராறு காரணமாக இளைஞர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது அருணாச்சல ஈஸ்வரர் கோவில் தெரு. இந்த தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை அதன் உரிமையாளர் விஜய் நேற்று காலை எடுக்க வந்தார். அப்போது, அவரது ஆட்டோவில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஜய், உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பந்தல் போடுவதில் தகராறு:
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, உயிரிழந்த நபர் அந்த தெருவில் உள்ள முருகன் கோவில் இரண்டு நாட்களாக பந்தல் போடும் பணியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் அடுத்தடுத்து பல உண்மைகளை கண்டறிந்தனர்.
உயிரிழந்த நபர் திருவொற்றியூர் ஏகவல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மோகன். அவருக்கு வயது 33. இவர் பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். ஆர்கே.நகர் பாரதிநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 25. மணிகண்டனுக்கும், மோகனுக்கும் பந்தல் போடுவதில் முன்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், இருவரும் மோதல் போக்குடனே இருந்து வந்துள்ளனர்.
கழுத்து அறுத்துக் கொலை:
இந்த நிலையில், இவர் இவரது தம்பி தீபனுடன் இணைந்து முருகன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பந்தல் போட்டுள்ளார். பந்தல் போட்ட பிறகு மது அருந்திய மோகன், தனது தம்பி தீபனை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்திவிட்டு, அங்கே இருந்த ஆட்டோவிலே படுத்து தூங்கியுள்ளார். தொழில்போட்டி காரணமாக மோகன் மீது ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், ஐ.ஓ.சி. நகரைச் சேர்ந்த தனது கூட்டாளி சிவாவுடன் சேர்ந்து ஏகவல்லியம்மன் கோவில் தெருவிற்கு சென்றுள்ளனர்.
அப்போது, ஆட்டோவில் தூங்கிக்கொண்டிருந்த மோகனை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று காலை 8 மணிக்கு வழக்குப்பதிவு செய்த போலீசார் காலை 11 மணிக்கு குற்றவாளிகளான மணிகண்டன் மற்றும் சிவா இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 3 மணி நேரத்திற்குள் கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
பந்தல் போடுவதில் ஏற்பட்ட தொழில்போட்டி தகராறில் ஆட்டோவில் மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபரை, கழுத்தை அறுத்து இளைஞர்கள் இருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க:அதிமுக பிரமுகரின் கழுத்தில் கத்தியை வைத்து 80 சவரன் நகை, ரூ. 38 லட்சம் பணம் கொள்ளை
மேலும் படிக்க: Crime: 4 மாத தனிமை.. வீட்டிற்கு வர மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன்..!