Chennai crime: கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட வாலிபர்
சென்னையில் நடந்த குற்ற சம்பவங்களை கீழே காணலாம்.

கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட முயன்ற வாலிபர்
சென்னை வடபழனியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி மருந்து கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். கடந்த 16 ம் தேதி வேலையை முடித்து வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென வீட்டிற்குள் புகுந்து அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, பின் சுதாரித்து கொண்டு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மிரட்டி அந்த நபரை தாக்க முயன்றுள்ளார். உடனே அந்த நபர், வீட்டிற்கு வெளியே வந்து வெளிப்புறமாக கதவை பூட்டி தப்பி சென்றுள்ளார்.
சம்பவம் குறித்து வடபழனி மகளிர் போலீசார் விசாரித்தனர். மேலும் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். இதில் சாலிகிராமம், சிங்காரவேல் தெருவைச் சேர்ந்த குமரேசன் ( வயது 30 ) என்பவர், அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் குமரேசன் வடபழனியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்து மது அருந்தி உள்ளார். மேலும் மது வாங்கி தருவதாக கூறியதால் அதே பகுதியில் குமரேசன் காத்திருந்தார். அப்போது, தனியாக சென்ற கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து சென்று வீட்டிற்குள் புகுந்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, குமரேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
பிளஸ் - 2 படித்து மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது
சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் 8 வது தெருவைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு ( வயது 50 ) இவர் அதே பகுதியில் ஸ்ரீ பவானி பிரைமரி ஹெல்த் கேர் என்ற பெயரில் கிளினிக் வைத்துள்ளார். இவர் மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்ப்பதாக, மருத்துவத் துறைக்கு புகார் சென்றுள்ளது. அதன் படி திருவள்ளூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் அம்பிகா , திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் மனோஜ் ஆகியோர் அடங்கிய குழு , கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வெங்கடேஸ்வரலு பிளஸ் 2 மட்டுமே படித்து , மருத்துவம் பார்ப்பது தெரிய வந்தது. இதை யடுத்து கிளினிக்கிற்கு 'சீல்' வைத்த மருத்துவ அதிகாரிகள் சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வெங்கடேஸ்வரலுவை கைது செய்து திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு ஜாமினில் விடப்பட்டார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் போலி மருத்துவம் பார்த்து சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.





















