சென்னையில் பார்சலுடன் சிக்கிய பெண்! உடல் வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தல்
சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கி விற்பனைக்காக வைத்திருந்த மணிப்பூரைச் சேர்ந்த பெண் கைது. 4,800 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்.

பார்சலுடன் நின்ற பெண் - முன்னுக்கு பின் முரணான பதில்
சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு 12 காவல் மாவட்டங்களில் காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து , போதைப் பொருட்களை வைத்தருப்பவர்கள், கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக , S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , காவல் குழுவினர் மடிப்பாக்கம் ராம்நகர், கலைவாணர் தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு , அங்கு பார்சல் பெட்டியுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
சண்டிகரில் இருந்து சென்னைக்கு வந்த பார்சல்
மேலும் அவர் வைத்திருந்த பார்சல் பெட்டியை சோதனை செய்த போது, அதில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கி சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பேரில், S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கி விற்பனைக்காக வைத்திருந்த மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த Vunglianching ( வயது 39 ) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 4,800 எண்ணிக்கை கொண்ட Tapentadol Hydrochloride என்ற உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மேற்படி உடல்வலி நிவாரண மாத்திரைகளை Vunglianchingக்கு அறிமுகமான நபர் சண்டிகரில் இருந்து கொரியர் மூலம் சட்டவிரோத விற்பனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது. ஏற்கனவே இவர் மீது 1 குற்ற வழக்கு உள்ளது தெரிய வந்தது. மேலும் மேற்படி குற்ற சம்பவத்தில் தொடர்புடைய மற்ற தலைமறைவு நபர்களை பிடிக்க காவல்குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட Vunglianching , விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மாவா பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 2 பெண்கள் கைது. 1.2 கிலோ குட்கா மற்றும் 2 கிலோ மாவா பாக்கெட்டுகள் பறிமுதல்.
N-2 காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர், காசிமேடு, இந்திரா நகர் பாலம் அருகே கண்காணிப்பு பணியில் இருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த 2 பெண்களை நிறுத்தி விசாரணை செய்து, சோதனை செய்த போது, அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மாவா பாக்கெட்டுகளை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன் பேரில் , சட்டவிரோதமாக குட்கா மற்றும் மாவா பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த காசிமேடு பகுதியை சேர்ந்த ராதா ( வயது 40 ) , தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ரமணி ( வயது 43 ) ஆகிய 2 பெண்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.2 கிலோ குட்கா மற்றும் 2 கிலோ மாவா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் சேர்ந்து , ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து குட்கா மற்றும் மாவா பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து , காசிமேடு பகுதியில் உள்ள மீனவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் ராதா மீது ஏற்கனவே 1 குற்ற வழக்கு உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.





















