எதே... காரை பார்க்கிங்ல நிறுத்துனதுக்கு 1500 ரூபாய் கட்டணம்.. சென்னை சென்ட்ரலில் பகல் கொள்ளை!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 34 மணி நேரம் காரை நிறுத்தியதற்கு பார்க்கிங் கட்டணமாக ரூபாய் 1500 வசூலிக்கப்பட்டது பயணி இடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது சென்ட்ரல் ரயில் நிலையம். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி இந்தியாவின் பல நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வட இந்தியாவிற்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இங்கிருந்தே செல்கின்றன.
1500 ரூபாய் பார்க்கிங் கட்டணம்
தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்திச் செல்ல பார்க்கிங் எனப்படும் வாகனம் நிறுத்தும் வசதியும் உள்ளது. இதில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். இந்த பார்க்கிங் ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அவர் தனது காரை அங்கு 34 மணி நேரம் நிறுத்திவிட்டு வெளியே எடுத்துள்ளார். அப்போது அவரிடம் காரை நிறுத்தியதற்காக ரூபாய் 1585 கட்டணமாக தெரிவித்துள்ளனர். இதனால், அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும், அவர் வேறு வழியின்றி இதை கட்டணமாக செலுத்தியுள்ளார்.
பகல் கொள்ளை:
தற்போது இந்த பார்க்கிங் கட்டணத்தை அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது பகல் கொள்ளை என்றும், இந்த அநியாயத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள இந்த சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணத்தை சீர் செய்ய வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மட்டுமின்றி தனியார் வசம் உள்ள தமிழ்நாட்டின் பல பார்க்கிங்கிலும் இது போன்ற கட்டண கொள்ளை நடப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். இதைச் சீர் செய்ய வேண்டும் என்றும், பார்க்கிங் கட்டணங்களுக்கு அரசு ஒழுங்குமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
முடிவுக்கு வருமா கட்டண கொள்ளை?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக வாகனங்களில் வரும் பயணிகள் தங்களது வாகனங்களின் பாதுகாப்பு கருதி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சொந்தமான பார்க்கிங்கில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.

ஆனால், வாகனங்களின் பாதுகாப்பிற்காக பன்மடங்கு கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதனால், பலரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பதிலாக அருகில் உள்ள மற்ற இடங்களில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். ரயில் நிலையங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் மத்திய அரசும், ரயில்வே வாரியமும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.





















