(Source: ECI/ABP News/ABP Majha)
Broadway Bus Stand: பொதுமக்கள் கவனத்திற்கு! தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம் - காரணம் என்ன?
தீவுத்திடலில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க மாநகராட்சி சார்பில் ரூபாய் 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பழமையான பேருந்து நிலையங்களில் பிராட்வே பேருந்து நிலையமும் ஒன்று. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்களை எதிர்கொள்ளும் இந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு மாற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பிராட்வேயைச் சுற்றி மெட்ரோ ரயில் பாதை மற்றும் 7 நடைமேம்பாலங்கள் கட்டவேண்டி உள்ளதால், தற்காலிகமாக தீவுத்திடலுக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது பேருந்து நிலையம் உள்ள இடத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்படுவதுடன் 9 மாடியில் வணிகவளாகமும் அமைக்கப்படவுள்ளது. அதேபோல் குறளகம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் 10 மாடிகள் கொண்ட வணிகவளாகம் கட்டப்படவுள்ளது.
தீவுத்திடலில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க மாநகராட்சி சார்பில் ரூபாய் 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
823 கோடி ஒதுக்கிய சென்னை மாநகராட்சி
பிராட்வே பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் சீரமைக்க சென்னை மாநகராட்சி ரூபாய் 823 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதனால் பிராட்வே பேருந்து நிலையத்தில் விரைவில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு, பேருந்து நிலையம் விரைவில் இடிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
சென்னையில் அதிக மக்கள் பயன்படுத்திய பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்தது. இங்கிருந்துதான் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதால், பிராட்வேயில் இருந்து அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
ஆனாலும் சென்னைக்குள் செல்லும் பேருந்துகள் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் சில பேருந்துகளும் பிராட்வேயில் இருந்து இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பிராட்வேவுக்கு அருகில் சௌகார்பேட்டை, சென்னை உயர்நீதிமன்றம், சென்னை துறைமுகம், ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை மற்றும் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட சென்னையின் முக்கிய இடங்கள் பிராட்வேவைச் சுற்றி இருப்பதால், பிராட்வே பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாகவே இயங்கும்.
எனவே பிராட்வே செல்லும் பொதுமக்கள் தீவுத்திடலுக்குச் சென்று அங்கிருந்து தாங்கள் செல்லும் இடங்களுக்கு பயணிக்க திட்டமிட்டுக்கொள்வது சிரமங்களைக் குறைக்கலாம்.